எலெக்ட்ரிக் கார், இரண்டு கதவுகள் கார் - இந்தியர்களின் மாறி வரும் ரசனை!

எலெக்ட்ரிக் கார், இரண்டு கதவுகள் கார் - இந்தியர்களின் மாறி வரும் ரசனை!

ஒரே மாதிரியான டிசைன் கொண்டு சில கார்கள் இந்திய சந்தையில் எப்போதும் எடுபட்டதில்லை. குறிப்பாக இரண்டு கதவுகளைக் கொண்ட கார்கள் முன்னர் மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. டாடா நானோவை மறக்க முடியுமா?

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு கதவுகளைக் கொண்ட கார்கள் சந்தையில் நிறைய அறிமுகமாகின. ஆனால், மக்கள் மத்தியில் ஏனோ வரவேற்பை பெறவில்லை. மாருதி நிறுவனத்தின் சென் கார்பன், எலெக்ட்ரிக் கார்ன மைனி ரேவா, ஃபோக்ஸ்வேகன் போலோ போன்ற வாகனங்கள் பரீட்சார்த்த முறையில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், பெரிய அளவில் கவனம் ஈர்க்க முடியவில்லை.

பொதுவாக இரண்டு கதவுகள் கொண்ட கார் என்பது இந்தியாவில் அரிதானது. நான்கு இருக்கை கொண்ட வாகனத்தில் டிரைவருக்கு அருகே உள்ள சீட் வழியாக உள்ளே நுழையும்படி செய்யலாம். ஆனால், உள்ளே செல்வதும், இறங்குவதும் சிரமமாக இருக்கும் என்பதால் மக்கள் விரும்புவதில்லை.

தற்போது மக்களின் மனநிலை மாறியிருக்கிறது என்கிறார்கள். இந்திய நகரங்களில் கடுமையான நெருக்கடி. போக்குவரத்து நெருக்கடி, பார்கிங் நெருக்கடி தவிர வேறு சில பிரச்னைகளும் உண்டு. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. அதன் காரணமாக மக்களின் கவனம் எலெக்ட்ரிக் கார்களின் மீது திரும்பி வருகிறது.

சமீபத்தில் நீல்ஸன் மற்றும் எம்.ஜி மோட்டார் எடுத்த ஆய்வறிக்கையில் 71 சதவீத இந்தியர்கள் காரில் தனியாகவோ அல்லது துணையோடு பயணம் செய்வதை விரும்புகிறார்கள். வேறு யாரும் கூட இருப்பதை ஏனோ விரும்பவில்லை. அதிலும் 88 சதவீதம் பேர் ஒரு நாளைக்கு 30 கி.மீ தூரம் மட்டுமே பயணம் செய்ய விரும்புகிறார்கள்.

தற்போதைய இந்தியர்கள் பெரிய குடும்பத்தோடு பயணம் செய்வதில்லை. கூடவே ஒருவர் அல்லது மூவர் மட்டுமே பயணம் செய்யும்படி நேரிடுகிறது. ஆகவே, கார்கள் பெரிய சைஸில் இருப்பதை மக்கள் விரும்பவில்லை.

நீண்ட தூர பயணம், மணிக்கணக்கில் காரை ஓட்டுவது போன்றவற்றில் பலர் ஆர்வம் இழந்துவிட்டார்கள். 2 மணி நேரத்திற்கு ஒரு முறை எங்கேயாவது நிறுத்தி, ஓய்வெடுத்த பின்னரே கிளம்புகிறார்கள். அடிக்கடி மொபைல் பார்க்கும் பழக்கம் பலரிடம் இருப்பதால் மொபைலை பார்க்காமல் கார் ஓட்டுவது கடினமாக இருக்கிறது.

இந்தியா முழுவதுமே பார்க்கிங் என்பது பெரும் சவாலான விஷயமாக இருந்து வருகிறது. பொதுப்போக்குவரத்தைத் தவிர்த்துவிட்டு தனி வாகனங்களில் பயணம் செய்வதை பலர் விரும்புகிறார்கள். கார் வைத்திருப்பவர்களில் பாதி பேர், எரிபொருளுக்காக மாதம் ஆறாயிரம் ரூபாய்க்கு அதிகமாக செலவழிக்க தயாராக இருக்கிறார்கள்.

வேகன் ஆர் போன்ற கார்களை மக்கள் விரும்புகிறார்கள். வேகன், எலெக்ட்ரிக் கார்களாக உருவெடுக்கும்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். சிறிய வடிவிலான எலெக்ட்ரிக் கார் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. நிஸான் சகுரா, நான்கு பக்கமும் கதவுகளை கொண்ட கார். ஒரு நாளைக்கு 120 முதல் 150 கி.மீ வரை பயணம் செய்ய முடியும். இது தவிர சிட்ரோன் ஏஎம்ஐ, பியட் 500 எலெக்ட்ரிக் போன்றவை சந்தையில் பெரிய அளவில் விற்பனையாகும் முக்கியமான எலக்ட்ரிக் கார்கள்.

டாடா நானோ, சிறிய காராக இருந்தது. இந்திய நகரங்களுக்கு பொருத்தமாக இருந்து. குறைவான விலைக்கும் கிடைத்தது. ஆனால், ஏனோ மக்கள் மத்தியில் வரவேற்பை பெற முடியவில்லை. இன்றைய நிலையில் டாடா நானோ, எலெக்ட்ரிக் காரா மறுபடியும் அறிமுகப்படுததப்பட்டால் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com