பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதனால், சுற்றுச்சூழல் பாதிப்புகளும் ஏற்படுகிறது. கச்சா எண்ணெய்க்காக அரபு நாடுகளையே சார்ந்திருப்பது மேற்கத்திய நாடுகளுக்கு பிரச்சினையாக இருப்பதால், எலக்ட்ரிக் வாகன உற்பத்திக்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது, எதிர்காலத்தில் ஆட்டோமொபைல் துறையே எலக்ட்ரிக் வாகனங்களை நம்பித்தான் இருக்கப்போகிறது என்பது உறுதியாகிவிட்டது.
ஆனால், எலக்ட்ரிக் வாகனங்களில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால், அதன் விலை மிகவும் அதிகமாக இருக்கும். எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் மிகப்பெரிய பங்கு வகிப்பது பேட்டரிதான் என்பதால், பேட்டரியில் பயன்படுத்தப்படும் லித்தியம் மற்றும் பல்வேறு உலோகத்தின் விலை இதில் சேர்க்கப்படுகிறது. எனவே பெட்ரோல் டீசலின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, அதிக விலை கொண்ட எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்தாலும் மக்கள் நிச்சயம் வாங்க மாட்டார்கள்.
இதன் காரணமாகவே, எல்லா தரப்பு மக்களும் எலக்ட்ரிக் வாகனத்தை வாங்க வேண்டும் என்பதற்காக, உலக நாடுகள் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் தான் உலகிலேயே அதிக அளவில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யும் சீனாவில், எலக்ட்ரிக் கார்களுக்கென்றே பிரத்தியேகமாக சுடுகாடு ஒன்று இருப்பதை சமீபத்தில் ஒரு யூடியூபர் கண்டுபிடித்தார். அவர் வெளியிட்ட வீடியோவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்கள், முதலீட்டாளர்களையும் சீன அரசையும் எப்படி எல்லாம் ஏமாற்றுகிறது என்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார்.
அவர் வெளியிட்ட வீடியோவில், சுமார் 10,000-த்திற்கும் அதிகமான புதிய எலக்ட்ரிக் கார்கள் திறந்தவெளியில் நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அந்தக் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தைச் சுற்றி, புதர் போல புற்கள் வளர்ந்துள்ளதை வைத்துப் பார்க்கும்போது, அவை பல மாதங்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது என்பது தெரிகிறது.
ஏன் இந்தக் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது?
புதிய வாகனத்தை உற்பத்தி செய்யும் எந்த நிறுவனமாக இருந்தாலும், அதை டீலர்களுக்குக் கொடுத்து விற்பனை செய்ய வேண்டும். ஆனால் வெறும் 31 மைல்கள் மட்டுமே ஓடியே புதிய எலக்ட்ரிக் வாகனங்கள் ஏன் இப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
அரசிடம் எலக்ட்ரிக் வாகனத்திற்கான மானியத் தொகை பெற வேண்டும் என்பதற்காகவும், முதலீட்டாளர்களிடம் அதிக முதலீட்டைப் பெற வேண்டும் என்பதற்காகவும், அதிக உற்பத்தி மற்றும் விற்பனை எண்ணிக்கையை காட்ட, போலியான முகவரியில் எலக்ட்ரிக் வாகனத்தை ரெஜிஸ்டர் செய்து கணக்கு காட்டப்பட்டுள்ளது. மேலும், ரெஜிஸ்டர் செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை லிமிட்டைத் தாண்டியதால், வேறு வழியின்றி திறந்த வெளியில் இந்த வாகனங்கள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் இந்தக் காணொளியை வெளியிட்ட 'வின்ஸ்டன் ஸ்டெர்செல்' என்ற யூடியூபர், இதை எலக்ட்ரிக் கார்களின் சுடுகாடு என அழைக்கிறார்.