

தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலையும் விரைவில் உயரப் போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வநதன. இந்நிலையில் தற்போது மின்சார கட்டணமும் உயரப் போவதாக தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை, எளிய மக்களுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நிலையில், மின் கட்டணம் உயர்ந்தால் அது இலவச மின்சாரத் திட்டத்தையும் பாதிக்குமா என்ற கேள்வி எழுகிறது.
100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு மட்டுமே தற்போது மின்சார கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 200, 300, 400 மற்றும் 500 யூனிட் என அடுத்தடுத்த 100 யூனிட்டுகளுக்கு கட்டண விகிதத்தின் படி மின் கட்டணம் உயரும். இந்நிலையில் மத்திய அரசு மின்சார சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
ஏற்கனவே கடந்த 5 முறையும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால், மின்சார சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கைவிட்டது. ஆனால் 6வது முறையாக மீண்டும் மின்சார சட்டத் திருத்தத்தைக் கையில் எடுத்துள்ளது மத்திய அரசு. விரைவில் இந்தத் திருத்தம் அமலுக்கு வந்து விடும் என்பதால், தமிழகம் உள்பட நாடு முழுவதும் மின்சார கட்டணம் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன என தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பின் தலைவரான காந்தி கூறுகையில், “மத்திய அரசு தற்போது 6வது முறையாக மின்சார சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர முயற்சி செய்கிறது. இந்தத் திருத்தம் அமலுக்கு வரும் பட்சத்தில், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பு வாய்ந்த பொதுத் துறை விநியோக நிறுவனங்களின் சொத்துக்கள் அனைத்தும் தனியாருக்கு விற்கப்படும். ஏற்கனவே அனைத்து மாநில எதிர்க்கட்சிகளும் மின்சார சட்டத் திருத்தத்தை எதிர்த்ததன் காரணமாக, கடந்த 5 முறையும் இதனை மத்திய அரசு கைவிட்டது.
ஆனால் இம்முறை சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதில் மத்திய அசு தீவிரமாக இருப்பதால், விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திருத்தம் ரயில்வே உள்பட தனியார் உற்பத்தி தொழில்களுக்கான மின்சார செலவை 20% குறைத்தாலும், வீடுகளுக்கான மின் கட்டணத்தை 80% உயரத்தி விடும்” என அவர் எச்சரித்துள்ளார்.
மின்சார விநியோக நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திப்பதால் தான், தனியாருக்கு விற்பதாக மத்திய அரசு காரணம் சொல்கிறது. ஆனால், இந்த நஷ்டத்திற்கு காரணமே தனியார் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட மின்சார கட்டணக் கொள்கைகள் தான் என சொல்லப்படுகிறது.
ஏற்கனவே மின்சார உற்பத்தி நிறுவனங்களை தனியாருக்கு விற்ற நிலையில், விநியோக நிறுனங்களையும் விற்று விட்டால் ஏழைகளுக்கு மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இதனால் மத்திய அரசு மின்சார சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும் என தமிழ்நாடு மின்சாரத் துறை கோரிக்கை வைத்துள்ளது.