கிருஷ்ணகிரி ஊர்ப்பகுதியில் யானைகளின் அட்டகாசம் – விவசாயி பரிதாப பலி.

கிருஷ்ணகிரி ஊர்ப்பகுதியில் யானைகளின் அட்டகாசம் – விவசாயி பரிதாப பலி.

கிருஷ்ணகிரி நகருக்குள் யானைகள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. யானைகள் தாக்கியதில் விவசாயி ஒருவர் பலியானார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்தில் இருந்து இரண்டு ஆண் யானைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி வனச்சரகத்திற்கு வந்தன. தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் இந்த யானைகள் நேற்று முன்தினம் அதிகாலையில் சோக்காடி காப்புக்காட்டில் இருந்த யானைகள் அங்கிருந்து கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுவர் பூங்கா வழியாக சென்று தேவசமுத்திரம் ஏரிக்கு வந்தன. இது குறித்து தகவல் அறிந்து ஓசூர் வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் ராஜ மாரியப்பன் தலைமையில் வனச்சரகர்கள் கிருஷ்ணகிரி ரவி,  ராயக்கோட்டை பார்த்தசாரதி மற்றும் 50க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் அங்கு சென்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட கலெக்டர் தீபக்சேக்கப் அங்கு சென்றதுடன் யானைகளை அடர்ந்த வனப்பகுதியிக்குள் விரட்ட வனத்துறைக்கு ஆலோசனையும்  வழங்கினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 யானைகளும் தேவசமுத்திரம் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி நகருக்குள் புதிய வீட்டு வசதி வாரிய பகுதிக்கு வந்தன. பின்னர் அங்கிருந்து ராயக்கோட்டை மேம்பாலம் வழியாக சேலம் பைபாஸ் பகுதிக்கு வந்ததுடன் அங்கு சாலையின் நடுவில் உள்ள தடுப்பு கம்பிகளை கால்களால் மிதித்து சேதப்படுத்தி  பின்னர் லண்டன் பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் வழியாக பெங்களூரு சாலையில் உள்ள பல்பொருள் அங்காடி பக்கமாக சென்றன. அதன் அருகில் உள்ள தெரு, வழியாக புதிய பஸ் நிலையம் கொத்தம்பேட்டா சிப்பாயூர் வழியாக சாமந்த மலைக்கு யானைகள் சென்றுள்ளன. அச்சமயம் சாமந்த  மலையைச் சேர்ந்த விவசாயியான பெருமாள் தனது தோட்டத்தை காவல் காக்க  அந்த வழியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த யானைகளைக் கண்டதும் ஓட முயன்றார் ஆனால் அவர் சுதாரிக்கும் முன் அதில் ஒரு யானை துதிக்கையால் திடீரென பெருமாளை தூக்கிப்போட்டு தந்தத்தால் குத்தியது மற்றொரு யானையும் சேர்ந்து அவரை காலால் எட்டி உதைத்து தள்ளியது. கண்ணிமைக்கும் நேரத்தில் யானைகள் தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்து அலறினார்.

பெருமாள்
பெருமாள்

யானைகள் அங்கிருந்து சென்று விட்ட நிலையில் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி சென்று காயம் அடைந்த பெருமாளை 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தற்போது சாமந்த மலையில் உள்ள ஒரு மாந்தோப்பில் அந்த யானைகள் சுற்றி வருகின்றன. இந்த யானைகளை வனத்துறையினர் அடர் பகுதிக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுத்து வருகின்றனர். கிருஷ்ணகிரியில் யானைகள் தாக்கி விவசாயி பலியான சம்பவமும் யானைகள் நகரை ஒட்டி உள்ள தோப்புக்குள் சுற்றி வருவதும் அந்தப் பகுதியில் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியின் நகரையொட்டி சோக்காடி ராயக்கோட்டை சாலை பகுதிகளில் யானைகள் இதற்கு முன்பும் வந்துள்ளன. ஆனால் கிருஷ்ணகிரி நகருக்குள் இதுவரையில் யானைகள் வந்ததில்லை. ஆனால் தற்போது முதல் முறையாக கிருஷ்ணகிரியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள புதிய வீட்டு வசதி வாரியம் ராயக்கோட்டை சாலை லண்டன் பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் பெங்களூர் சாலை கிருஷ்ணகிரி ஆயுதப்படை குடியிருப்பு  வழியாக சாமந்தமலைக்கு செல்கின்றன. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத அதிகாலை நேரத்தில் யானைகள் வந்ததால் பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஒருவேளை காலை 7 மணிக்கு மேலாக நகருக்குள் யானைகள் வந்திருந்தால் பெரிய அளவில் பொருட்செதமும் உயிர்ச்சேதமும் ஏற்பட்டிருக்கும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

கடந்த  இரண்டு மாதத்தில் இந்த யானைகள் தாக்கியதில் நான்கு பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் பாவூர் அருகே காட்டுக்கொள்ளை கிராமத்துக்குள் வந்த இந்த யானைகள் ராம்குமார் என்பவரை தாக்கிக் கொன்றன. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 21ஆம் தேதி தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே ஏரி கொட்டாய் இருளர் காலனி சேர்ந்த காளியப்பன் என்பவரை இந்த யானைகள் தாக்கிக் கொன்றது. தொடர்ந்து கடந்த மாதம் 27ஆம் தேதி தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே முக்குளம் பெரிய முரசுப்பட்டியை சேர்ந்த வேடி என்ற விவசாயி இந்த யானைகள் தாக்கியதால் உயிரிழந்தார்.  தொடர்ச்சியாக நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் சாமந்த மலையை மழையைச் சேர்ந்த விவசாயி பெருமாள் யானைகள் தாக்கியதில் பலியாகியுள்ளார்.

யானைகளின் வழித்தடத்தை மனிதர்கள் ஆக்கிரமித்தால் இப்படித்தான் வழி தவறி வரும் யானைகளின் அட்டகாசமும் இருக்கும். எனினும் மனிதர்களை பலி வாங்கும் முரட்டுக் குணம் கொண்ட அந்த இரண்டு முரட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டும் வரை கிருஷ்ணகிரி மக்களுக்கு நிம்மதி இருக்காது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com