மத்திய அரசின் நிலக்கரி சுரங்கத் திட்டத்தில் தமிழக டெல்டா பகுதிகள் நீக்கம்!

மத்திய அரசின் நிலக்கரி சுரங்கத் திட்டத்தில் தமிழக டெல்டா பகுதிகள் நீக்கம்!
ARUN SANKAR/AFP via Getty Images

டலூர் மாவட்டம், நெய்வேலியில் மத்திய அரசின் சார்பில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டு பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த இடத்தில் நிலக்கரி எடுக்க கூடுதல் விளைநிலங்கள் கையகப்படுத்தும் மத்திய அரசின் என்எல்சி நிர்வாக முயற்சியை எதிர்த்து விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் தொடர்ந்து போராட்டம் நடத்த வருகின்றனர். இந்தப் பிரச்னையே தீராத நிலையில், தற்போது காவிரி டெல்டா பகுதிகளிலும் நிலக்கரி எடுக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்து விவசாயிகளுக்கு மேலும் பதற்றத்தை அதிகப்படுத்தி உள்ளது.

இது சம்பந்தமாக நிலக்கரி அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி, நாடு முழுவதும் 101 வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் தமிழகத்தை சேர்ந்த மூன்று பகுதிகளும் இடம்பெற்று இருந்தன. அவை, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்தில் சேத்தியாத்தோப்பு கிழக்கு பகுதி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் வடசேரி ஆகிய மூன்று பகுதிகள் இடம்பெற்று இருந்தன. இந்த மூன்று பகுதிகளும் காவிரி டெல்டா பகுதிகள் ஆகும்.

‘தமிழ்நாட்டில் ஏற்கெனவே காவிரி டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளன. எனவே, இந்த இடத்தில் விவசாயப் பணிகளைத் தவிர வேறு எந்த வேலைகளையும் மேற்கொள்ள முடியாது. அப்படி இருக்கையில், இந்த இடங்களில் எப்படி நிலக்கரி எடுக்கும் பணியை மேற்கொள்ள முடியும்?’ என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் இந்தத் திட்டத்துக்கு தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வதாகக் கூறி இருக்கும் மத்திய அமைச்சர் பிரகாலத் ஜோஷி, ‘தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு நிலக்கரி சுரங்க ஏலப் பட்டியலில் இருந்து தமிழக பகுதிகள் நீக்கப்படுகின்றன’ என்று தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இந்த முடிவை வரவேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com