
உலகின் பிரபலமான வலைதளங்களில் விக்கிபீடியாவும் ஒன்று. இதில் இல்லாத தகவல்களே இல்லை எனலாம். ஆனால் இந்த தளத்தை தற்போது எலான் மஸ்க் வம்புக்கு இழுத்துள்ளார்.
விக்கிபீடியா என்ற பெயரை டிக்கிபீடியா என மாற்றிக் கொண்டால், 1 பில்லியன் டாலர்கள் நன்கொடை தருகிறேன் என அவர் கூறியுள்ளார்.
டெஸ்லா, ஸ்பேஸ் X, ட்விட்டர் உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் தனது ட்விட்டர் X தளத்தில் இப்படி கிண்டலாக பதிவிட்டுள்ளார். அவர் அந்த பதிவில் "விக்கிபீடியா தளம் தனது பெயரை டிக்கிபீடியா என மாற்றினால், 1 பில்லியன் டாலர் நன்கொடை கொடுக்கிறேன்" என விக்கிபீடியா தளத்தை தரக்குறைவாக பேசியுள்ளார்.
இவர் ஏன் இப்படி கூறினார் என்றால், சமீபகாலமாக விக்கிபீடியா தன் பயனர்களிடம் நன்கொடை வசூலித்து வருகிறது. இதை விமர்சனம் செய்யும் வகையிலேயே எலான் மஸ்க் இப்படி பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அவர் கூறிய கருத்தையும் விக்கிபீடியாவில் சேர்க்குமாறு கூறியுள்ளார்.
மேலும் அவருடைய மற்றொரு பதிவில், "விக்கிபீடியா விற்பனைக்கு அல்ல என்ற செய்தியைப் பரப்பி ஏன் விக்கிபீடியா இவ்வளவு நிதி திரட்டுகிறது? அந்த தளத்தை இயக்குவதற்கு நிச்சயம் இவ்வளவு பணம் தேவையில்லை" என அவர் கூறியுள்ளார். இதை ஏன் அவர் கூறுகிறார் என்றால் விக்கிபீடியாவின் கட்டுரைகளை அனைவருமே தனது மொபைலில் எளிதாக சேமிக்க முடியும்போது, விக்கிபீடியா தளம் முற்றிலும் தேவையற்றது என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என்கிறார்.
இதற்கு கருத்து தெரிவிக்கும் விதமாக ஒரு நபர் "விக்கிபீடியாவின் பெயரை மாற்ற வேண்டும் என்றால் அதையும் நீங்களே வாங்கி விடுங்களேன்" என நக்கலாகக் கூறியுள்ளார். இந்த கருத்துக்கு எலான் மஸ்க் "நான் ஒன்றும் அவ்வளவு முட்டாள் இல்லை" என பதிலளித்துள்ளார். இப்படி விக்கிபீடியாவை எலான் மஸ்க் வம்புக்கு இழுத்துள்ள சம்பவம், இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.