ட்விட்டர் நிறுவனத்தில் தனது சிஇஓ பதவியை ராஜினாமா செய்வதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.
"ட்விட்டர் நிறுவனத்திற்கு புதிய சிஇஓ நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதற்காக நியமிக்கப்பட்டுள்ள பெண் இன்னும் ஆறு வாரங்களில் தனது பணியைத் தொடங்குவார். மென்பொருள் தயாரிப்பு மற்றும் அமைப்பின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் தலைமை தொழில் அதிகாரியாக தன்னுடைய பணி மாறும்" என என ட்விட்டர் மற்றும் ஸ்பேஸ் X நிறுவன உரிமையாளரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
பல சர்ச்சைகளுக்கு இடையே கடந்த ஆண்டு Twitter நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், அதன் பிறகு அவர் கொண்டு வந்த பல மாற்றங்களால் ட்விட்டர் CEO பொறுப்பிலிருந்து அவர் விலக வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்தைத் தெரிவித்து வந்தனர். இதற்கிடையே, தான் ட்விட்டர் நிறுவனத்தில் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமா? என வாக்கெடுப்பு நடத்தியதில், பெரும்பாலானவர்கள் அவருக்கு எதிராக வாக்களித்தளால், மக்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு கட்டுப்படுவதாக உறுதியளித்திருந்தார்.
பின்னர், தனது வேலையை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு முட்டாள் ஒருவர் கிடைத்த பிறகு ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து நான் விலகுவேன். அதன்பிறகு சிஸ்டம் மற்றும் சாப்ட்வேர் குழுக்களை நான் பார்த்துக் கொள்வேன் என பதிவிட்டிருந்தார். இந்த சம்பவம் நடந்து சில மாதங்கள் ஆகிறது. பலரும் சமூக வலைதளங்களில் இவர் CEO பொறுப்பிலிருந்து விரைவில் வெளியேற வேண்டும் என கருத்து தெரிவித்து வந்த நிலையில், தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக பெண் ஒருவரை நியமத்துள்ளதாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் போட்டுள்ளார்.
மேலும் இந்த புதிய பெண் சிஇஓ ட்விட்டருக்கு மட்டுமின்றி அவருடைய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் சிஇஓ-வாக தொடர்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் எதிர்ப்பாளர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றுள்ளது.