அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட "அரசு திறன் துறை" (Department of Government Efficiency - DOGE) தலைவராக இருந்த உலகப் பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்க், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மஸ்க் தனது சமூக ஊடக தளமான 'X' இல் வெளியிட்ட அறிக்கையில், "அரசாங்கத்தில் வீண் விரயங்களைக் குறைப்பதற்கான வாய்ப்பை வழங்கிய அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நன்றி. DOGE இன் பணி காலப்போக்கில் வலுப்பெறும், இது அரசாங்கம் முழுவதும் ஒரு வாழ்க்கை முறையாக மாறும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த நான்கு மாதங்களாக டிரம்ப் நிர்வாகத்தில், செலவுகளைக் குறைப்பது, செயல்பாடுகளை நெறிப்படுத்துவது மற்றும் பல துறைகளைக் குறைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் மஸ்க் ஈடுபட்டிருந்தார். அரசாங்கத்தின் "விரயமான மற்றும் மோசடியான" செலவினங்களை அகற்றுவதாக அவர் பிப்ரவரியில் ஒரு கூட்டத்தில் அறிவித்தார்.
மஸ்கின் இந்த அறிவிப்பு, டிரம்ப்பின் "பிக் பியூட்டிஃபுல் பில்" (Big Beautiful Bill) எனப்படும் மிகப்பெரிய செலவு மசோதாவை மஸ்க் பகிரங்கமாக விமர்சித்த ஒரு நாளுக்குப் பிறகு வந்துள்ளது. இந்த மசோதா DOGE இன் நோக்கத்துடன் முரண்படுவதாகவும், தேசிய பற்றாக்குறையை அதிகரிப்பதாகவும் மஸ்க் தெரிவித்திருந்தார். "ஒரு மசோதா பெரியதாக இருக்கலாம், அல்லது அழகாக இருக்கலாம். ஆனால் இரண்டும் ஒன்றாக இருக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை" என்று மஸ்க் குறிப்பிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எலான் மஸ்கின் இந்த விலகல், அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், டெஸ்லா முதலீட்டாளர்கள், மஸ்க் தனது நிறுவனங்களில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில், இந்த முடிவு வரவேற்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது