
பிரபல சமூக வலைதள நட்சத்திரம், யூடியூபர், மற்றும் பிக் பாஸ் ஓடிடி சீசன் 2 வெற்றியாளர் எனப் பல அடையாளங்களைக்கொண்டவர் எல்விஷ் யாதவ். தனது யூடியூப் வீடியோக்கள் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் கவனத்தை ஈர்த்த இவர், சமூக வலைதளங்களில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.
இவரது வாழ்க்கை முறை, கருத்துகள் என அனைத்தும் இணையத்தில் பேசுபொருளாகவே இருக்கும்.
இந்த அளவுக்குப் பிரபலமான ஒரு நபரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடந்தது குருகிராமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை 5:30 முதல் 6:00 மணிக்கு இடையில், மூன்று முகமூடி அணிந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து, குருகிராமில் உள்ள எல்விஷ் யாதவின் வீட்டின் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
24-க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் வீட்டின் தரைத்தளம் மற்றும் முதல் மாடியை இலக்காகக் கொண்டு சுடப்பட்டுள்ளன.
அதிர்ஷ்டவசமாக, தாக்குதலின்போது எல்விஷ் யாதவ் வீட்டில் இல்லை.
அவரது குடும்பத்தினரும், வீட்டு பராமரிப்பாளரும் உள்ளே இருந்தபோதும், யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது மூன்று முகமூடி அணிந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
எல்விஷ் இந்தச் சம்பவத்திற்கு முன் எந்த மிரட்டல்களையும் பெறவில்லை. அவர் தற்போது வேலை நிமித்தமாக வெளியூரில் உள்ளார் என்று எல்விஷ் யாதவின் தந்தை ராம் அவதார் யாதவ் தெரிவித்துள்ளார்.
காவல்துறை விசாரணை
சம்பவ இடத்திற்கு விரைந்த குருகிராம் காவல்துறையினர் மற்றும் குற்றப்பிரிவு அதிகாரிகள், தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து தோட்டாக்களின் எச்சங்களைச் சேகரித்து வருகின்றனர்.
சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்தத் தாக்குதல் பயமுறுத்துவதற்காக அல்லது மிரட்டுவதற்காக நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
எல்விஷ் யாதவின் குடும்பத்தினரின் புகாரின் அடிப்படையில் விரைவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் என்று காவல்துறை கூறியுள்ளது.
பின்னணி மற்றும் சர்ச்சைகள்
பிக் பாஸ் வெற்றியாளர் என்ற புகழுக்கு அப்பால், எல்விஷ் யாதவ் சில சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.
இந்தத் திடீர் தாக்குதல், குருகிராமின் உயர்மட்ட பகுதியில் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.
காவல்துறை இந்தச் சம்பவத்தின் நோக்கத்தைத் தீர்மானிக்கத் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது.