அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை: வழக்கு ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

 உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. நீதிபதிகள் சூர்யகாந்த், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய சிறப்பு அமர்வில் இந்த விசாரணை நடைபெற்றது.

அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ” செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கும் போது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணானது. இதுபோன்ற உத்தரவு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். இந்த விவகாரத்தில் ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றதே முரணானது ” என வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள் ”பல்வேறு உத்தரவுகளை மேற்கோள் காட்டினாலும், உயர்நீதிமன்றம் தனது கருத்தை வெளிப்படுத்துவதில் என்ன தவறு உள்ளது, ஒருவேளை உயர்நீதிமன்றம் தவறாக கையாண்டிருந்தால் இந்த நீதிமன்றம் அதனை அரசியல் சாசன விதி படி ரத்து செய்யும். உயர் நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு தான் முடிவு எடுத்ததாகக் கருதுகிறோம்.மருத்துவமனையில் உள்ள போது மருத்துவர்கள் கருத்தை கொண்டு தான் விசாரணை நடத்த முடியும். தற்போதைய நிலையில் உயர் நீதிமன்றம் விசாரணையை தொடர்வதுதான் சரியாக இருக்கும்” என தெரிவித்தனர்.

தொடர்ந்து தனது தரப்பு வாதங்களை முன்வைத்த சொலிசிட்டர் ஜெனரல் “ இந்த வழக்கு பிற குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கும். எனவே இந்த ஆட்கொணர்வு மனு விசாரணை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தவறாக நடந்துள்ளது. இந்த வழக்கு மிகவும் தீவிரமானது, எனவே தான் இந்த விவகாரத்தில் விசாரணை வேண்டும் என கேட்கிறோம். தற்போதைய உயர்நீதிமன்ற உத்தரவால் குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் எடுக்க முடியவில்லை” என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள்” செந்தில் பாலாஜியை தீவிர பரிசோதனை செய்த பின்னரே நிபுணர்கள் கருத்து அடிப்படையில் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளதே. மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்கும் ஒருவரை முழுமையாக காவலில் எடுத்து விசாரிக்க கோரியதை நிராகரித்த விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது அதிருப்தி அளிக்கிறது.

மருத்துவர்கள் தீவிரமாக ஆராய்ந்துதான் தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர். உயர் நீதிமன்றம் அனைத்து அதிகாரங்களும் கொண்டது, விரைந்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க முடியும். தேவைப்பட்டால் மீண்டும் ஒரு மருத்துவைக் குழுவை அமைத்து ஆராயலாமே. இந்த விசயத்தில் உயர் நீதிமன்றம் என்ன உத்தரவுகளை பிறப்பிக்கிறது என்பதைப் பார்த்த பின்னர் உச்ச நீதிமன்றம் விசாரிக்க தயாராக உள்ளது.

உயர்நீதிமன்றம் ஆட்கொணர்வு மனு மீது தனது இறுதி உத்தரவை 22ம் தேதி பிறப்பிக்க உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உயர்நீதி மன்றம் உத்தரவை பார்த்த பின்னர் உச்ச நீதிமன்றம் விசாரிக்கும். வழக்கு ஜூலை 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” நீதிபதிகள் தெரிவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com