அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வருகின்ற 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், அதற்கு மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இதையொட்டி அங்கு முன்னாள் அமைச்சர்கள், ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கூடினர். அப்போது, அங்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ் மரியாதை செலுத்தினார். பின்னர், தலைமை அலுவலகத்திற்கு உள்ளே சென்று பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வகையில் உரிய கட்டணம் செலுத்தி வேட்பு மனுவை பெற்று, அதனைப் பூர்த்தி செய்து, பின்னர் தாக்கல் செய்தார்.
பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியே போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் தலைமையில் பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி தலைமை அனுமதி அளித்துள்ளார். இதனையடுத்து, வழக்கு நாளை காலை 10 மணிக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.