தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலையில் தொடங்கிய நிலையில், மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை குறித்து சபாநாயகர் அப்பாவு எந்த மாற்றமும் தெரிவிக்காததால், அந்த இருக்கையில் ஓ. பன்னீர்செல்வம் அமர்ந்தார். சட்டப்பேரவையில் அதிமுக வரிசை இருக்கைகளில் சபாநாயகர் அப்பாவு எந்த மாற்றமும் செய்யாததால், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் வந்து அமர்ந்தார். இதன்மூலம் எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பதாக கருதப் படுகிறது.
எதிர்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை ஏற்கப்படாததால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சியினர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியவுடன் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி அம்மாள், மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவர் எஸ்.சாமிவேலு, மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன், உத்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.