தொலைத் தொடர்பு உபகரணத் தயாரிப்பாளரான எரிக்சன் நிறுவனம் 8,500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
எரிக்சன் நிறுவனம் இந்தியாவில் பல முன்னணி டெலிகாம் சேவை நிறுவனத்தின் 5ஜி சேவை விரிவாக்க திட்டங்களைக் கைப்பற்றியிருக்கும் நேரத்தில் , அவர்களது செலவினங்களைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, உலகளாவிய தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 8,500 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் பணியாளர்களிடையே மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து எரிக்சன் நிறுவன நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மெமோவில் நிறுவன செலவினங்களைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 8500 க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளோம் என குறிப்பிட்டிருக்கிறது. பல நாடுகளில் இந்த வாரம் பணிநீக்கம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது எனவும் எரிக்சன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி போர்ஜே எகோல்ம் Borje Ekholm தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை எரிக்சன் நிறுவனம் ஸ்வீடன் நாட்டில் மட்டும் சுமார் 1400 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் டெலிகாம் துறை 5ஜி, 6ஜி சேவையை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் எரிக்சன் நிறுவனம் இந்த பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது தொலைத்தொடர்பு துறையில் மிகப்பெரிய பணிநீக்கமாக கருதப் படுகிறது.
உலகம் முழுவதும் ஜனவரி மாதம் வரையில் தொழில் நுட்ப நிறுவனங்கள் பொருளாதார நிலைமைகளைக் காரணம் காட்டி ஆயிரக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்து வந்தது. இந்த பிப்ரவரி மாதம் வங்கியியல், கண்சல்டிங், இப்போது டெலிகாம் துறை நிறுவனங்கள் வரையில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.