ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - அ.தி.மு.க உட்கட்சி பிரச்னை முடிவுக்கு வருகிறது; என்ன செய்யப்போகிறார், ஓ.பி.எஸ்?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - அ.தி.மு.க உட்கட்சி பிரச்னை முடிவுக்கு வருகிறது; என்ன செய்யப்போகிறார், ஓ.பி.எஸ்?
Published on

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், முன்னாள் முதல்வரான ஓ,பி.எஸ், சென்னையில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார்கள். இடைத்தேர்தல் பிரச்சாரம் குறித்தும், இனி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஓ.பி.எஸ் முடிவெடுப்பார் என்று செய்திகள் வெளியாகின்றன.

இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் தன்னுடைய ஆதரவாளர்களுடன் பிரச்சாரம் செய்ய முடியாது. அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ பிரச்சார பீரங்கிகள் பட்டியலில் ஓ.பி.எஸ் பெயர் இல்லை. அவரது ஆதரவாளர்கள் பெயரும் இல்லை. ஆகவே, அந்தக் காரணத்தை மேற்கொள் காட்டவேண்டிய நிலையில் இருக்கிறார். என்னால் பிரச்சாரத்திற்கு வரமுடியாது சூழலில் இருக்கிறேன். ஈரோடு கிழக்கு வாக்காளர்களை இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

டி.டி.வி தினகரனின் அ.ம.மு.க கட்சி, வேட்பாளரை திரும்பப் பெற்றுக்கொண்டு தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்தது. யாருக்கு ஆதரவு என்பதை விரைவில் அறிவிக்கப்போவதாகவும் செய்திகள் வந்தன. ஆனால், இதுவரை அறிவிக்கவில்லை. ஓ.பி.எஸ் வழியில் இரட்டை இலைச் சின்னத்திற்கே ஆதரவு என்று டி.டி.வி தினகரன் அறிவிக்கக்கூடும். இல்லாவிட்டால், அ.ம.மு.க தொண்டர்கள் குழப்பமடைந்து தே.மு.தி.க வேட்பாளருக்கு வாக்களிக்க நேரலாம்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க, விஜயகாந்த் கட்சியான தே.மு.தி.கவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோற்றது. தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி முறிந்தது என்றாலும் அந்தச் செய்தி நிறைய தொண்டர்களை சென்று சேரவில்லை. டி.டி.வி தினகரனுடன் அறிவிப்பு ஏதும் வெளியாகாவிட்டால், அவரது தொண்டர்கள் தே.மு.தி.க வேட்பாளருக்கு வாக்களிக்கக்கூடும் என்கிறார்கள்.

சசிகலாவும் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை தெளிவு படுத்தவில்லை. கூடிய விரைவில் அம்மாவின் தொண்டர்களை நேரில் சந்திப்பேன் என்று உறுதியளித்திருந்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அவரும் இரட்டை இலைச்சின்னத்தை ஆதரிக்கவேண்டிய நிலையில் இருக்கிறார். சசிகலாவிடமிருந்து கடிதமோ, வாட்ஸ்அப் வாய்ஸ் நோட்டோ வர வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் ஓ.பி.எஸ், உட்கட்சி பிரச்னையை முடிந்தளவு ஒத்திப்போடுவதற்கே முயற்சி செய்வார் என்று அ.தி.மு.க வட்டாரத்தில் செய்தி உலா வருகிறது. இரட்டை இலைச் சின்னம், எடப்பாடி தரப்பிற்கு எளிதாக சென்றிருப்பதால் ஓ.பி.எஸ் தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது

தொண்டர்களை சமாதானப்படுத்தவும், எடப்பாடி எதிர்ப்பில் தான் உறுதியாக இருப்பதையும் ஓ.பி.எஸ் வெளிக்காட்ட வேண்டியிருக்கிறது. ஆகவே, அடுத்து வரும் சில நாட்களில் தன்னுடைய நிலையை விளக்கி நாளேடுகளில் முதல் பக்க விளம்பரம் தருவார் என்கிறார்கள், அவரது ஆதரவாளர்கள். ஓ.பி.எஸ், இனி என்ன செய்வார்? இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com