ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா ஜனவரி 4-ம் தேதி மறைந்ததைத் தொடர்ந்து பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவித்த கையோடு அங்குத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. நாளை வேட்பு மனுதாக்கல் ஆரம்பமாகிறது.
தி.மு.க தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு அத்தொகுதியை விட்டுக்கொடுத்துள்ளது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைமை பிரச்னையால் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. நாளைக்குள் ஒரு தீர்வு எட்டப்படவேண்டும்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க போன்றவை தனித்து களமிறங்கியிருள்ளன. தே.மு.தி.கவும் தனித்து களமிறங்குவதாக அறிவித்துள்ளது. தேர்தல் கூட்டணி விஷயத்திலும், இட பங்கீடு விஷயத்திலும் கடைசிவரை இழுத்தடிப்பது தே.மு.தி.கவின் ஸ்டைல். இம்முறை ஏனோ, ஆரம்பத்திலேயே தனித்து போட்டியிடுவதாக அறிவித்து, வேட்பாளரையும் அறிவித்துவிட்டார்கள்.
வெற்றியோ, தோல்வியோ தேர்தலில் நிற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தே.மு.தி.க இருப்பதாக சொல்கிறார்கள். 2011-ம் ஆண்டு ஈரோடு கிழக்குத் தொகுதியில் அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்து தே.மு.திகதான் வெற்றி பெற்றது. 2016ல் தி.மு.கவுடன் கூட்டணி அமையாத காரணத்தால் தே.மு.தி.முக பலவீனமடைந்தது. இந்நிலையில் தனித்துப் போட்டியிட்டு பலத்தை காட்ட முடிவு செய்திருக்கிறார்கள்.
வேட்பு மனு தாக்கல் செய்ய அடுத்த செவ்வாய் கிழமை கடைசி நாள். ஆகவே, ஒரிரு நாட்களில் அ.தி.மு.கவின் நிலை என்னவென்று பா.ஜ.க முடிவெடுததாக வேண்டும். பா.ஜ.க ஆதரவு தந்தாலும் தராவிட்டாலும் எடப்பாடி தன்னுடைய வேட்பாளரை நிறுத்துவது உறுதி என்கிறார்கள். ஒருவேளை பா.ஜ.கவின் ஒத்துழைப்பு இன்றி வேட்பாளரை நிறுத்தினால் இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வரலாம். ஒருவேளை ஓ.பி.எஸ் குழுவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தால் எடப்பாடி அணிக்கு பலவீனமாகிவிடும்.
அ.தி.மு.க இடியாப்பச் சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பது உண்மைதான். அதை விட பெரும் சிக்கலில் பா.ஜ.க மாட்டிக்கொண்டிருப்பதாக கமலாலயம் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. அ.தி.மு.கவின் இரு தரப்பையும் சமாதானப்படுத்துவதில் நேரம் செலவழித்துக்கொண்டிருந்தால், மக்கள் மத்தியில் பா.ஜ.கவின் பெயர், ரிப்பேராகிவிடும் என்று கவலைப்படுகிறார்கள். அடடே!