ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - முத்துசாமியின் மந்திரம் பலிக்குமா?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - முத்துசாமியின் மந்திரம் பலிக்குமா?
Published on

முத்துசாமியை தெரியாதவர்கள் யாரும் ஈரோட்டில் இருக்க முடியாது. பெரியார், சம்பத் போன்ற தலைவர்களுக்கு பிந்தைய தலைமுறையின் முக்கியமான அரசியல்வாதி. எம்.ஜி.ஆர் காலத்து ஆசாமி. 1977 முதல் அடுத்து வந்த பத்தாண்டுகளுக்கு அ.தி.மு.கவின் ஈரோடு முகமாக இருந்தவர். அ.தி.மு.க ஆட்சியிலும் தி.மு.க ஆட்சியிலும் ஈரோட்டிற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர்களின் முத்துசாமி முக்கியமானவர்.

எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் எட்டு ஆண்டுகள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். அவருக்குப் பின்னர் எந்த ஆட்சி வந்தாலும் போக்குவரத்துத்துறை அமைச்சர்கள் பெரும்பாலும் கொங்கு மண்டலத்தை சார்ந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். எம்.ஜிஆருக்கு நெருக்கமாக இருந்தவர் பின்னாளில் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றுகொண்டவர்.

1991 தேர்தலில் பவானியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். 1996 தோல்விக்குப் பின்னரும் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க செல்வாக்கை சரியாமல் காப்பாற்றி வந்தார். 1998, 1999 தேர்தல்களில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தபோது உடனிருந்தவர் முத்துசாமி. அதற்கு பின்னர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது முத்துசாமி பின்னுக்கு தள்ளப்பட்டு செங்கோட்டையன் முன்னிலைப்படுததப்பட்டார்.

பத்தாண்டுகளுக்குப் பின்னர் 2010ல் தி.மு.கவில் சேர்ந்த முத்துசாமிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தனக்கென்று தனிப்பட்ட அளவில் செல்வாக்கு கொண்டிருந்தாலும் அவரது ஆதரவாளர்கள் பெரும்பாலும் எம்.ஜி.ஆரின் தொண்டர்களாகவே இருந்தார்கள். தி.மு.க கட்சியில் இணைந்து செயல்பட்டதால் தொண்டர்கள் மத்தியில் முத்துசாமிக்கு செல்வாக்கு குறைய ஆரம்பித்தது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுறை போட்டியிட்டு தோற்றிருக்கிறார். 2021ல் தொகுதி மாறி, ஈரோடு மேற்கு தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது நகர்ப்புற திட்டமிடல், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமங்களின் அமைச்சராக பணியாற்றி வருகிறார். ஈரோடு பகுதியின் தி.மு.க மாவட்டச் செயலாளராக இருக்கும் முத்துசாமி, காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை வெற்றி பெறச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருககிறார்.

முத்து சாமிக்கு அவரது சமூகம் சார்ந்த வாக்கு வங்கி உண்டு. இது தவிர, கொங்கு மண்டலத்தின் தி.மு.க முகமாகவும் இருக்கிறார். முத்து சாமி எந்த கட்சியில் இருநதாலும் அவரது ஆதரவாளர்கள் வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள். ஆனால், அவரது ஆதரவோடு களத்தில் நிற்கும் இளங்கோவனுக்கு மக்கள் வாக்களிப்பார்களா என்பது கேள்விக்குறிதான்

முத்துசாமியை மக்கள் எளிதில் அணுக முடியும். ஆனால், இளங்கோவன் மட்டுமல்ல வேறு எந்த மாற்றுக்கட்சி வேட்பாளரையும் எளிதில் அணுக முடியாது என்றுதான் ஈரோடு வாக்காளர்கள் நினைக்கிறார்கள். சமீபத்தில் மறைந்த இளங்கோவனின் மூத்த மகன் மீது ஈரோடு கிழககு வாக்காளர்களின் முக்கியமான மனக்குறையே அவர் பொதுமக்களோடு தொடர்பில் இருந்தது இல்லை என்பதுதான்.

இளங்கோவனுக்காக முத்துசாமி, கடைசி நேர சூறாவளி பிரச்சாரத்தில் இறங்கினால் அவரது ஆதரவாளர்களின் ஆதரவை இளங்கோவனுக்கு பெற்றுத் தரமுடியும். இன்னும் இரண்டு நாட்களில் முடிவு தெரிந்துவிடும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com