ஈரோடு தேர்தல் களம்: என்ன செய்யப் போகிறது, பா.ஜ.க?

ஈரோடு தேர்தல் களம்: என்ன செய்யப் போகிறது, பா.ஜ.க?
Published on

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் ஒரே நாளில் பரபரப்பாகிவிட்டது. தி.மு.க. கூட்டணி சார்பாக களம் இறங்கும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து த.மா.காவுக்கு பதிலாக அ.தி.மு.க போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம், த.மா.க 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்றுப் போயிருந்தது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட யுவராஜாவுக்காக அ.தி.மு.கவினர் கடுமையாக உழைத்தார்கள். ஆனாலும் நூலிழையில் வெற்றி கை நழுவிப்போனது.

எடப்பாடி, அ.தி.மு.க வேட்பாளரை நிறுத்தினால் அதை ஓ.பி.எஸ் தலைமையிலான கோஷ்டி ஏற்றுக்கொள்ளுமா? அதை எதிர்த்து ஓ.பி.எஸ் தன்னுடைய ஆதரவாளரை போட்டியிட களமிறக்கினால் இடைத்தேர்தலில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்கிற கேள்வி எழுந்துவிடும்.

ஏற்கனவே அ.தி.மு.க கோஷ்டி பிரச்னையை எதிர்கொள்வதில் தேர்தல் ஆணையம் இரு வேறு விதமாக செயல்பட்டிருக்கிறது. மத்திய தேர்தல் ஆணையம், எடப்பாடியை அங்கீகரித்துவிட்டதாக செய்தி வந்தபோது, தமிழக தேர்தல் ஆணையம் ஓ.பி.எஸ்ஸை ஒருங்கிணைப்பாளராக குறிப்பிட்டு கடிதம் எழுதியது.

இந்நிலையில் பா.ஜ.க எடுக்கப்போகும் முடிவைப் பொறுத்துதான் அ.தி.மு.கவின் முடிவு அமையப்போகிறது. இரு தரப்பையும் சமாதானப்படுத்தி, அ.தி.மு.க வேட்பாளரை ஏற்றுக்கொண்டு கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.க இருக்கிறது.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் களமிறங்கினால் பா.ஜ.க.வின் ஆதரவு யாருக்கு என்பது சிக்கலாகிவிடும். எந்த கோஷ்டியை ஆதரிப்பது என்பதில் பா.ஜ.க. முடிவெடுக்காமல் மதில்மேல் பூனையாக இருக்க முடியாது.

பா.ஜ.கவை ஆதரிக்கும் கோஷ்டிக்குத்தான் இரட்டை இலை ஒதுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பா.ஜ.கவுடன் யார் ஒத்துழைக்கப்போகிறார்கள் என்பதை உறுதி செய்த பின்னர் பா.ஜ.க முடிவெடுக்கும்.

அ.தி.மு.க கூட்டணி சார்பில் ஒருவேளை பா.ஜ.க போட்டியிடுவதாக முடிவெடுக்கப்பட்டாலோ அல்லது அ.தி.மு.கவை எதிர்த்து பா.ஜ.க தனித்து போட்டியிட்டாலோ வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

அ.தி.மு.க கோஷ்டிகளுடன் மட்டுமல்ல பா.ம.க உள்ளிட்ட கட்சிகளுடனும் பேசி ஒரு வலுவாக கூட்டணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.க இருக்கிறது. ஒருவேளை அப்படியொரு கூட்டணி உருவாக்க முடியாவிட்டால் பா.ஜ.கவால் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத்தேர்தலை எதிர்கொள்ளவே முடியாது.

அனைத்து தரப்பினரை அணுகி, கூட்டணி பேச வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.க தள்ளப்பட்டிருக்கிறது. இடைத்தேர்தல் அறிவிப்பால் பா.ஜ.கவுக்கு நேர்ந்திருக்கும் சங்கடத்தை எப்படி சமாளிக்கப் போகிறார்கள்? இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com