டெஸ்லா நிறுவன அதிபர் எலான் மாஸ்கின் தந்தையான எரோல் மஸ்க் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். இவர் செர்வோடெக் ரினியூவபிள் பவர் சிஸ்டம் லிமிடெட் நிறுவனத்தின் உலகளாவிய ஆலோசகராக உள்ளார். எர்ரோல் மஸ்கின் இந்திய பயணம் "நாட்டின் வளர்ந்து வரும் பசுமை தொழில்நுட்பம் மற்றும் மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்த உத்வேகம் பெறும்," என்று சர்வோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் அலுவல் ரீதியான பயணத்திற்காக இந்தியா வந்தவர் , அதை ஆன்மீகப் பயணமாகவும் மாற்றிக் கொண்டார் .
புதன்கிழமை பிற்பகல் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு , தனது மகள் அலெக்ஸாண்ட்ரா மஸ்க்குடன் சென்ற எர்ரோல் மஸ்க் அங்குள்ள கோயிலை சுற்றி பார்த்து வழிபாடு செய்தார். "இந்த கோயிலுக்கு வந்ததில் தான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கோயில் மிகவும் அற்புதம். நான் செய்த சிறந்த விஷயங்களில் ஒன்று இது தான்," என்று பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ராமர் கோவிலுக்கு வரும் போது அவர், இந்தியாவின் பாரம்பரிய உடைகளில் ஒன்றான பைஜாமா குர்தா அணிந்திருந்தார்.
ராமர் கோயிலைத் தவிர, அருகிலுள்ள ஹனுமன்கரி கோயிலுக்கும் சென்று எரோல் மஸ்க் இறைவனை தரிசித்தார். அவரின் சுற்றுப்பயண பட்டியலில் தாஜ்மஹால் இருந்தாலும் ஆக்ராவின் அதிக வெப்பநிலை காரணமாக அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது.
ராமர் கோயில் செல்வதற்கு முன்னர் , டெல்லிக்கு வருகை தந்திருந்த எர்ரோல் மஸ்க் "சிவபெருமானை பின்பற்றினால், உலகில் உள்ள எல்லா பிரச்சனைகளும் சரியாகிவிடும். உலகம் அமைதியாக இருக்கும்" என்று தான் நினைப்பதாக கூறினார் . "நான் ஒரு நிபுணர் அல்ல, ஆனால் , சனாதான தர்மத்தில்பால் ஈர்க்கப்பட்டேன். இது உலகின் மிகவும் பழமையான மதம். இந்த மதம் மிகவும் புனிதமானது மற்றும் ஆழமானது. இது என் மனதில் ஆழமான விளைவை ஏற்படுத்துகிறது. நாம் உண்மையில் அறிந்து கொண்டுள்ள விஷயங்கள் மிகவும் குறைவு என்று தோன்ற வைக்கின்றது," என்று மஸ்க் கூறியுள்ளார்.
புராதான இந்தியாவின் தத்துவமான சனாதன தர்மத்தை பற்றி எர்ரோல் வியந்து பேசியுள்ளார். இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் ஆன்மீகத்தின் மீதான எரோல் மஸ்க்கின் ஈடுபாடு இந்தியர்களை நெகிழச் செய்துள்ளது.