இயற்கையை மீட்டெடுக்க புது சட்டம்:ஐரோப்பாவில் விவாதம்!

இயற்கையை மீட்டெடுக்க புது சட்டம்:ஐரோப்பாவில் விவாதம்!
Published on

ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில், இயற்கையை மீட்டெடுக்கும் உத்தேச சட்டத்தை உறுப்பு நாடுகள் ஆதரிக்க வேண்டும் என ஸ்பெயின் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐரோப்பா கண்டத்தில் உள்ள பிரிட்டனைத் தவிர்த்த பெரும்பாலான நாடுகள், ஐரோப்பிய ஒன்றியமாக ஒருங்கிணைந்து அந்தக் கண்டத்துக்கு உரிய பிரச்னைகளில் ஒத்த முடிவை எடுத்துவருகின்றன. எடுத்துக்காட்டாக, வாகனப் போக்குவரத்து, எரிவாயு எடுத்துச்செல்வது, சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நலவாழ்வுத் திட்டங்கள் என பலவற்றிலும், இந்த நாடுகளிடையே ஒரேமாதிரியான சட்ட விதிமுறைகளைப் பார்க்கமுடியும். வேறுபாடுகளும் உண்டு.

இதற்கான பொது உடன்பாடுகளுடன் சட்டங்களையும் இந்த ஒன்றிய இயற்றிக்கொள்ளும். வரும் புதனன்று ஐரோப்பிய நாடாளுமன்றம் கூடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமான மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தில், சேதமடைந்து பாதிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழலை மீட்கும் உத்தேச சட்டத்தை ஐரோப்பிய ஆணையம் முன்வைக்க இருக்கிறது. ஆணையத்தின் இந்த சட்டத்தை அனைத்து உறுப்பு நாடுகளும் ஆதரிக்க வேண்டும் என ஸ்பெயின் கேட்டுக்கொண்டுள்ளது.

இதில் செல்வாக்கு மிக்கதாகக் கருதப்படும் பழைமைவாத ஐரோப்பிய மக்கள் கட்சியானது இந்த சட்டத்தைக் கடுமையாக எதிர்க்கிறது. இதற்கு அந்தக் கட்சி கூறும் காரணம், புதிய சட்டத்தால் உணவுக்கு பிரச்னை உண்டாகிவிடும் என்பதுதான்! ஆனாலும், ஸ்பெயினின் ஆற்றல் துறை அமைச்சர் தெரசா ரிவேரா, ”இயற்கையைப் பாதுகாப்பது மட்டுமல்ல அதை மீட்பதும் மிகவும் முக்கியம்தான்; இந்த முறை முன்வைக்கப்படும் உத்தேச சட்டத்தை ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்தேச சட்டத்தில் உள்ளதைவிட நாம் சாதிக்க வேண்டியது இன்னும் அதிகமே; ஆனாலும் இந்த விசயத்தில் உடன்பாட்டுக்கு வருவது இப்போதைக்கு மிகச் சிறந்ததாகும் என்றும் ரிவேரா குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சுழற்சி முறையில் இந்த ஆண்டு இறுதிவரை ஸ்பெயின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிலையில், சக உறுப்பு நாடுகளின் ஆற்றல், சூழல் அமைச்சர்களின் அதிகாரபூர்வமற்ற கூட்டத்தையும் ரிவேரா நடத்தியுள்ளார்.

கார்களுக்கான அதிபட்ச கரி உமிழ்வு வரம்வை நிர்ணயிக்கும் கால அட்டவணையையும் வரும் ஐரோப்பிய நாடாளுமன்றக் கூட்டத்தில் வெளியிட வேண்டும் என்றும் ரிவேரா வலியுறுத்தியுள்ளார். ஆனால் அப்படிச் செய்வது வாகனப் போக்குவரத்துத் துறைக்கு கடும் சவாலாக இருக்கும் என மாற்றுத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com