குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளானாலும், இழப்பீடு அளிக்க வேண்டும்! - உயர் நீதிமன்றம் அதிரடி!

குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்துக்குள்ளானாலும்,  இழப்பீடு அளிக்க வேண்டும்! - உயர் நீதிமன்றம் அதிரடி!

வாகன ஓட்டுநர், குடி போதையில் வாகனத்தை ஓட்டி விபத்து நடந்திருந்தாலும் காப்பீட்டு இன்ஸூரன்ஸில் மூன்றாம் தரப்பினரால் பாதிக்கப்பட்டவருக்கு இன்ஸூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குடிபோதையில் வாகனத்தை இயக்குவது இன்ஸூரன்ஸ் பாலிசிகளின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் மீறுவதாக இருந்தாலும், இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு செலுத்துவதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும், விபத்தின்போது, குடிபோதையில் இருக்கும் ஓட்டுநர் நிச்சயமாக வாகனத்தை இயக்க தகுதியற்றவராக உள்ளார். அவரது உணர்வுகளும், புலன்களும் பலவீனமடையும். எனவே நிறுவனத்திற்கு மூன்றாம் தரப்பினருக்கு இழப்பீடு வழங்குவதில் இருந்து விலக்களிக்க முடியாது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

 குடித்து விட்டு வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், பாலிசியில் இழப்பீடு இல்லாமல் இருந்தாலும், இன்ஸூரன்ஸ் நிறுவனம் மூன்றாம் தரப்பினருக்கு முதல் முறையாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அதன் பின்னர், ஓட்டுநரோ, வாகனத்தின் உரிமையாளரோ இவர்களில் யார் யார் பொறுப்பானவர்களோ அவர்களிடம் இருந்து பணத்தை திரும்பப் பெறலாம் என்று நீதிபதி சோபி தாமஸ் ஒரு வழக்கில் கூறியுள்ளார்.

அதே சமயம் மூன்றாம் தரப்பினர், இன்சூரன்ஸ் நிறுவனத்தில் செல்லுபடியாகும் வகையில் காப்பீடு செய்யப்பட்டிருப்பதால், அவருக்கு விபத்தின் ஆரம்பத்தில் இழப்பீடு வழங்குவதற்கு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கேரளாவில், கடந்த 2013ம் ஆண்டு, மனுதாரர் ஆட்டோவின் பயணித்த போது, வேகமாக வந்த கார் ஒன்று ஆட்டோ மீது மோதியதில் விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில், மனுதாரர் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஏழு நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியும், ஆறு மாதங்கள் தொடர்ந்து ஓய்வு எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்.

இவரது மாத வருமானம் ரூ.12,000. தொடர்ந்து வேலைக்கும் செல்ல முடியாத நிலையில், ரூபாய் 4 லட்சம் இழப்பீடு கோரி எம்ஏசிடியை அணுகிய போதும், தீர்ப்பாயம் ரூபாய் 2.4 லட்சத்தை மட்டுமே இழப்பீடாக வழங்கியது. இதனால் மேல்முறையீடு செய்ய கேரள உயர்நீதிமன்றத்தை அணுகிய போது, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓட்டுநர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதால் காப்பீடு செய்தவருக்கு இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என்று காப்பீட்டு நிறுவனம் இந்த வழக்கில் வாதம் செய்த நிலையில், பாலிசியின் நிபந்தனைகளை மீறுவதாக இருந்தாலும், மூன்றாம் தரப்பினருக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. 

இது குறித்த தீர்ப்பில், அசல் இழப்பீடு, வேலைக்கு செல்லாததால் வருவாய் இழப்பு, வலி ​​மற்றும் துன்பம், பார்வையாளர் செலவுகள், வழக்கு செலவு என கூடுதலாக ரூ. 39,000யை ஆண்டுக்கு 7 சதவிகித வட்டியுடன் மேல்முறையீட்டாளரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யுமாறு நீதிமன்றம் காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com