ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அதன் பின் தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்குக் கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்திருந்தது. இது பற்றி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், 'ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை பரிசோதித்ததில் அவருக்கு இதயத் தமனி நோய் மற்றும் லேசான கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை பெற்று வரும் அவர் நன்றாகக் குணமடைந்து வருகிறார்' என்று கூறி இருந்தனர்.
சிகிச்சைகள் முடிந்து குணமடைந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இருபத்தி இரண்டு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன்பின் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இடைத் தேர்தல் பணி, வெற்றிக் கொண்டாட்டம் அதைத் தொடர்ந்து உடல் நலப் பிரச்னைகளுக்கு தீவிர சிகிச்சை என பல்வேறு பணிகளுக்கு பிறகு அவர் இன்று தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்க வந்தார்.