நெஞ்சு வலி காரணமாக ICU வில் அனுமதிக்கப் பட்டுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவி கே எஸ் இளங்கோவன் தற்போது உடல் நலத்துடன் உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஈ வி கே எஸ் இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றப் பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப் பட உள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தி.மு.க ஆதரவுடன் களமிறங்கிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அதிமுகவின் தென்னரசு விட 66,000-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதனையடுத்து, எம்.எல்.ஏவாக பதவியேற்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதியி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவேரா திடீரென உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது.
நேற்று திடீரென ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உடல் நலக் குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப் பட்டார். நெஞ்சு வலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும், இவருக்கு இதயவியல் நிபுணர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர் எனவும் தகவல் வெளியானது.
டெல்லிக்கு விமானத்தில் சென்று திரும்பிய அசதியில் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப் பட்டதாகவும் கூறப்படுகிறது.தற்போது . ஈவி கே எஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.