மூன்று பேருக்குக் கடமைப்பட்டிருக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!

மூன்று பேருக்குக் கடமைப்பட்டிருக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!

காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சென்ற மாதம் உடல் நிலை பாதிக்கப்பட்டு, சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருபது நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். ஓய்வில் இருந்து வந்த இளங்கோவன், கடந்த 12ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் மானிய கோரிக்கை விவாதம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் சட்டமன்றத்துக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னர் சற்று நேரம் அங்கிருந்துவிட்டு பின்னர் திரும்பி சென்றார்.

இந்நிலையில் நேற்று மீண்டும் சட்டமன்றத்துக்கு வந்திருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசுவதைக் கேட்பதற்காக சட்டமன்றத்துக்கு வந்தேன். கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ராகுல் காந்தியை பொறுத்தவரை அவரது பாட்டனார் காலத்தில் இருந்து இந்த நாட்டுக்கு சேவை மற்றும் தியாகம் செய்துள்ளனர். அவர்களை எப்படியாவது அடக்கி விடலாம் என்றும் சட்டத்தின் பெயரால் எப்படியாவது முடக்கி விடலாம் என்றும் நினைத்தால் அது கண்டிப்பாக நடக்காது.

இன்று சட்டமன்றத்துக்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சை கேட்கும்போது மிகவும் நன்றாக இருந்தது. அவரது பேச்சு கலைஞர் பேசுவது போல் இருந்தது. என்னைப் பொறுத்தவரை எனது பொது வாழ்வில் மூன்று பேருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஒன்று நடிகர் சிவாஜி கணேசன், அடுத்தது சோனியா காந்தி, மூன்றாவதாக நம்முடைய முதலமைச்சர் பாசத்துக்கும் மரியாதைக்கும் உரிய மு.க.ஸ்டாலினுக்கும் நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com