ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்கள் ஈரானில் வலுவடைந்து வரும் நிலையில், போராட்டக்காரர்களுக்கு தூக்கு தண்டனைகளை நிறைவேற்றி வருகிறது ஈரான் அரசு. ஈரானின் இந்தச் செயலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால், ‘ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் கடவுளுக்கு எதிராக போர் தொடுத்தவர்கள் ஆவர்| என்று சொல்கிறது ஈரான் அரசு. இப்படிப் பல பேருக்கு பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஜெயில் தண்டனையும் பலருக்குத் தூக்கு தண்டனையும் இந்த அரசு வழங்கி உள்ளது.
இந்த சூழலில் அலிரெஸா அக்பரி எனும் ஈரான் நாட்டின் முன்னாள் ராணுவ அதிகாரியும் துணை ராணுவ அமைச்சராகப் பதவியில் இருந்தவருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றி உள்ளது அந்த நாடு. இவர் இங்கிலாந்திலும் குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானில் 2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தீவிர நிலைப்பாட்டை கொண்ட மஹ்மூத் அஹமதிநிஜாத் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்பரி தனது துணை ராணுவ அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அதன் பிறகு அவர் இங்கிலாந்துக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இதனால் சந்தேகம் கொண்ட ஈரான் அரசு, இவர் இங்கிலாந்துக்கு உளவு பார்ப்பதாக குற்றம் சுமத்தியது. அதைத் தொடர்ந்து ஈரான் அணு விஞ்ஞானி மொஷென் பக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டதற்கும் அக்பரிதான் காரணம் என்றும் ஈரான் அரசு குற்றம் சுமத்தியது
இதை முற்றிலுமாக மறுத்தார் அக்பரி. ஆனாலும் ஈரான் அரசு அவரை கைது செய்தது. அதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் அதற்குக் கண்டனம் தெரிவித்தன. அதைத் தொடர்ந்து அக்பரி மீதான விசாரனையை தீவிரப்படுத்திய அந்நாட்டு நீதிமன்றம் இறுதியில் அவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதற்கும் உலக நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தபோதிலும். அக்பரிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாக தற்போது ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஆனால், அந்த தண்டனை எப்போது, எங்கு நிறைவேற்றப்பட்டது என்பதை அந்நாட்டு மக்கள் யாருக்கும் தெரிவிக்க மறுக்கிறது ஈரான்.
உலகத்திலேயே மரண தண்டனையை அதிகம் நிறைவேற்றும் நாடுகளில் ஈரானும் ஒன்று. தனது நாட்டு முன்னாள் அமைச்சர் மற்றும் ராணுவ அதிகாரிக்கே மரண தண்டனை கொடுத்து தூக்கிலிடப்பட்டது உலக நாடுகளையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.