

அமெரிக்கா– ஈரான் போரினால் கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது.
இலங்கை ,பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. பிலிப்பைன்ஸ் இதில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டதால் அவசரநிலை பிரகடனம் கொண்டு வந்துள்ளது.
போரின் காரணமாக ஈரான் ஹோர்மோஸ் ஜல சந்தியை போக்குவரத்து கப்பல்கள் கடப்பதற்கு கடுமையான நிபந்தனைகள் விதிப்பதால் , பெட்ரோல் ,டீசல் , எரிவாயு வரத்துகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈரானின் தாக்குதலினால் , பல எண்ணெய் கிடங்குகளும் , சுத்திகரிப்பு ஆலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் , சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் ஏற்றங்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் இந்திய நுகர்வோருக்கு நிம்மதியளிக்கும் வகையில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை (Excise Duty) குறைத்துள்ளது.பெட்ரோல் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி லிட்டருக்கு ₹13 லிருந்து ₹3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது ₹10 குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ₹10 ரூபாயாக இருந்த நிலையில், அது தற்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வரிக்குறைப்பு மார்ச் 27, 2026 அமலுக்கு வந்துள்ளன.
ஈரான் மீதான போர் தொடங்கும் முன்னர், கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 77 அமெரிக்க டாலராக இருந்தது , தற்போது கடும் நெருக்கடி காரணமாக 100 அமெரிக்க டாலரை கடந்து விற்பனையாகிறது. ஈரான் மீதான தாக்குதலுக்கு பழி வாங்குவதற்கு , மற்ற அரபு நாடுகளின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து ஈரான் தாக்குதலை நடத்துகிறது. இதனால் துபாய் உள்ளிட்ட ஒரு சில அரபு நாடுகளின் எண்ணெய் கிடங்குகளில் பணிகள் முற்றிலும் நின்று போய் உள்ளன. ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கப்பல் போக்குவரத்திற்கு இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளுக்கு தடை இல்லை என்றாலும் , அந்தப் பகுதியில் மற்ற நாட்டு கப்பல்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.இதனால் ஏற்பட்ட போக்குவரத்து தடைகளில் உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை கூடிக்கொண்டே வருகிறது.
இதன் தாக்கம் காரணமாக இந்தியாவில் உள்ள , தனியார் பெட்ரோல் நிறுவனமான நாயரா (Nayara) நேற்று வாடிக்கையாளர்களுக்கு தனது விலை உயர்வை அறிவித்துள்ளது. தற்போது போக்குவரத்து செலவுகள் மேலும் அதிகரித்துள்ளதால் , அந்த செலவுகளை ஈடுகட்ட நாயரா நிறுவனம் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5.30 வரையிலும், டீசல் விலையை ₹3 வரையிலும் உயர்த்தியுள்ளது.
இதனால் மக்கள் மத்தியில் எரிபொருள் விலை அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளதால் , இன்று காலை மத்திய அரசு அதிரடியாக கலால் வரிகளை பெருமளவில் குறைத்துள்ளது.
வரி குறைப்பின் பலன் எண்ணெய் நிறுவனங்களுக்கு செல்வதால் பெட்ரோல், டீசல் விலை குறையவோ, உயரவோ செய்யாது. எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையே நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது இந்த குறைப்பு பொதுமக்களுக்கு விலை குறைப்பாக இருக்காது மாறாக எண்ணெய் நிறுவனங்களின் சுமையை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.