
நவீனமயச் சூழலுக்கு ஏற்ப இந்தியாவின் டிஜிட்டல் துறையை மேம்படுத்த மத்திய அரசு, ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவின் தொழில்நுட்பங்களையும், தொழில் கட்டமைப்பையும் மாற்ற டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு 14,903 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அமைச்சரவையும் அதற்கு தற்போது ஒப்புதல் வழங்கி உள்ளது.
இந்தப் புதிய டிஜிட்டல் இந்தியா விரிவாக்கத் திட்டத்தின் கீழ். சிறப்புத்திறன், முதன்மை திட்டம் விரிவாக்கப்பட்டு இதன் மூலம் 6.25 லட்சம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு மேம்பட்ட திறன் மாற்றுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், தகவல் பாதுகாப்பு, கல்வி விழிப்புணர்வு ஆகிய திட்டங்கள் மூலம் 2.65 லட்சம் பேருக்கு தகவல் பாதுகாப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட உள்ளது. புதுயுக ஆளுமைகளை உருவாக்கவும், ஒருங்கிணைக்கவும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
தேசிய சூப்பர் கணினி இயக்கத் திட்டத்தின் கீழ் மேலும் 9 சூப்பர் கம்ப்யூட்டர்கள் இணைக்கப்பட உள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேலும் விரிவுபடுத்தி பல மொழி கருவியான பாசினியில் 8வது அட்டவணையின்படி 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகளும் பதிவேற்றம் செயல்பட உள்ளன. தேசிய அறிவு வலையமைப்பை நவீனப்படுத்தி 1,787 கல்வி நிறுவனங்களை செழுமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டிஜிலாக்கர் மூலமான டிஜிட்டல் ஆவண சரிபார்ப்பு வசதி இனி எம்.எஸ்.எம்.இ மற்றும் பிற நிறுவனங்களுக்கும் எளிதில் கிடைக்கவும், 2ம் மற்றும் 3ம் நிலை நகரங்களில் 1,200 ஸ்டார்ட்-அப்களுக்கு உதவி அளிக்கவும் மற்றும் சுகாதாரம், விவசாயம் தொடர்பாக மூன்று செயற்கை நுண்ணறிவு மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர, நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு சைபர் விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதோடு, கருவிகளை உருவாக்குதல், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு ஊக்கமளிப்பு, சேவைகளுக்கான டிஜிட்டல் அணுகலை ஊக்குவிப்பு மற்றும் இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு சூழல் அமைப்புக்கு உதவும் வகையிலும் டிஜிட்டல் இந்தியா திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.