
அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள், உண்மையில் ஏழைகளுக்கு போய் சேர்வதில்லை என, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கோவையில் உள்ள அரசு மருத்துவமனைகளில், மருந்துகள் வைக்கப்படும் அறையின் பொறுப்பாளராக பணியாற்றிய முத்து மாலை ராணி என்பவர், தனக்கு வர வேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்ககோரி, உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக மருந்து வாங்கியதாகவும், அது காலாவதியாகி அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகவும், முத்துமாலை ராணிக்கு எதிராக புகார் கூறப்பட்டிருந்தது.
இம்மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:
ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் அளிக்கப்படுவதாக,பொது தளங்களில் குற்றச்சாட்டுகள் வருகின்றன. சமீப காலங்களில், அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தும், நோய் பரவல் தொடர்கிறது.
கொரோனாவுக்கு பின் குரங்கம்மை, வைரஸ் காய்ச்சல் என தொடர்கின்றன. இதற்கான காரணங்களை கண்டுபிடிக்கவில்லை.
நோய் பரவல் குறித்து, பொது தளங்களில் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
எனவே, இது போன்ற நோய் பரவல் நடவடிக்கைகளில், சட்டவிரோதமாக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபடுகிறதா என்பதை விசாரிக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளுக்கும், தனியாருக்கும், மருந்துகள் வழங்கும் நிறுவனங்களின் நடவடிக்கைகளை, அரசு கண்காணிக்கிறதா என்பதை பரிசீலிக்க வேண்டியதுள்ளது. எனவே, அடுத்தடுத்து
எனவே அடுத்தடுத்து எந்த இடைவெளியும் இன்றி நோய் பரவலுக்கான காரணங்களை தெரிவிக்கவும், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மருந்து வியாபாரிகளின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தவும், அரசுக்கு உத்தர விடப்படுகிறது. வரும் 27ல் அறிக்கை அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
வழக்கு, நீதிபதி எஸ். எம்.சுப்ரமணியம் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தமிழகத்தில் புதிது புதிதாக நோய்கள் பரவக்காரணங்கள், மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து, விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி நடக்கிறது. அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். என்றார்.
இதையடுத்து, 'அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்தம் மருந்துகள், உண்மையில் ஏழை மக்களை போய் சேர்வதில்லை.
'ஆனால், அந்த மருந்துகள் ஏழைகளுக்கு வழங்கப்பட்டதாக பதிவு செய்யப்படுகிறது எனவும் தகவல் வருகிறது' என, நீதிபதி வேதனை தெரிவித்தார்.
'அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகளைவினியோகிப் பதாக கூறுவது உண்மை என்றால், அது சீரியசான விஷயம்; இதில் மருந்து நிறுவனங்களுக்கும், சுகாதாரத் துறைக்கும் தொடர்பு உள்ளதா?' எனவும், நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பின், விசாரணையை நவம்பர் 4க்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தள்ளி வைத்தார்.