- தா. சரவணா
மத்திய அரசின் ‛வந்தன் விகாஸ் கேந்திரா’ திட்டம் என்பது, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது ஆகும். இத்திட்டத்தின்படி, பழங்குடியினர் மக்கள், அவரவர் பகுதிகளில் விளையும் பொருட்களை மதிப்புக் கூட்டி, அதை விற்பனை செய்து, அதன் மூலமாக அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த வைப்பதாகும். இத்திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், திருப்பத்துார் மாவட்டத்திலும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 2022ம் ஆண்டு, ஜவ்வாது மலைக்கிராமமான புதூரில் இதற்கான மையம் தொடங்கப்பட்டது. இங்கு சாமை, வரகு, தினை, புளி ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு, நவீன முறையில் பேக்கிங் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணிகள் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை (டிவிஎஸ்) மூலமாக நடந்துவருகிறது.
இங்கு மதிப்பு கூட்டப்படும் பொருட்களில், தினை, வரகு, சாமை, புளி ஆகியவை குறித்து கனடா நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கேள்விப்பட்டு, அதன் சாம்பிள்களை அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டது. இதைத் தொடர்ந்து, தினை, வரகு, சாமை, புளி மாதிரிகள் கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு ஏற்புடையதாக முடிவுகள் வந்ததும், திருப்பத்துார் மலைக்கிராமத்தில் இருந்து மேற்குறிப்பிட்ட பொருட்கள் விரைவில் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
இது தவிர்த்து, புளி, சாமை, தினை, வரகு ஆகியவை தமிழகத்தில் சென்னை, மதுரை உட்பட குறிப்பிட்ட பெருநகரங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
தற்சமயம் அறக்கட்டளை சார்பில், புளியில் இருந்து சாறு எடுத்து, அதை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு 40 டன் புளி வாங்கப்பட்டு, 13 டன் புளி விற்பனை செய்யப்பட்டுள்ளது. (ஓட்டுடன் வாங்கும் புளி, துாய்மைப்படுத்தப்படுதலுக்கு பின்னர் 3ல் ஒரு பங்குதான் சுத்தமான புளி கிடைக்கும்) இங்கு மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 20 பேர் பணியாற்றி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்ட இந்த சிறு மலைகிராமத்திலிருந்து சிறுதானியங்களும், புளிச் சாறும் ஏற்றுமதியாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது பெருமிதத்துக்குரிய விஷயம்.