சபரிமலை பொன்னம்பலம் மேட்டில் அத்துமீறிய சிறப்பு பூஜை!

சபரிமலை பொன்னம்பலம் மேட்டில் அத்துமீறிய சிறப்பு பூஜை!


      பரிமலை ஐயப்பன் கோவில் அருகே உள்ள பொன்னம்பல மேட்டில் அத்துமீறிய சிறப்பு பூஜை செய்யப்பட்ட சம்பவமும் அதன்   தொடர்பாக முன்னாள் உதவியாளர் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதும் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     கேரளாவில் பந்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மண்டல பூஜை நடைபெற்று தொடர்ந்து வரும் மகர விளக்கு பூஜையின்போது ஐயப்ப சுவாமிக்கு  ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது சன்னிதானம் எதிரே இருக்கும் பொன்னம்பலம் மேடு  என்றழைக்கப்படும்  புனித இடத்தில் ஐயப்பனின் அம்சமாக மகரஜோதி தோன்றும். இதை தரிசிக்கவென்றே லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டு இருப்பார்கள்.

      மகரஜோதி தோன்றும் இடமான பொன்னம்பல மேடு பக்தர்களால் புனிதமான இடமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான பொன்னம்பலம் மேட்டில் ஒருவர் சட்டவிரோதமாக நுழைந்து சிறப்பு பூஜை நடத்தியதாக தெரிகிறது. இதை சிலர் காணொளிப்பதிவு செய்து அதை தேவசம்போர்டு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தச் செய்தியை அறிந்த தேவசம் போர்டு தலைவர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள மாநில டி.ஜி.பியிடம் புகார் அளித்துள்ளார்.

      இதை அடுத்து காவலர்கள் நடத்திய தீவிர விசாரணையில் சபரிமலை சன்னிதானம் அருகே வனப்பகுதிக்குள் அத்துமீறி  நுழைந்து சிறப்பு பூஜை செய்தது சென்னையை சேர்ந்த நாராயணன் என்ற நாராயணசாமி என்பவர் என்று தெரியவந்தது. இவர் சபரிமலை ஐயப்பன் கோவிலில் கீழ் சாந்தியின் (தந்திரி) உதவியாளர்களில் ஒருவராக பணியாற்றி உள்ளார். அப்போது இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. நாராயணன் தந்தரி பெயரில் போலியாக போர்டு வைத்து காரில் வலம் வந்துள்ளதை அடுத்து அவரை அப்போது காவலர்கள் கைது செய்துள்ளனர். தவிர கீழ் சாந்தியின் உதவியாளாராக இருந்தபோது சிறப்பு பூஜைகள் நடப்பதாக தேவசம்போர்டு பெயரில் போலியாக ரசீதுகளை அச்சிட்டு பக்தர்களை ஏமாற்றி விற்பனை செய்துள்ளார். இது தொடர்பாக நாராயணன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிநீக்கமும் செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

        இந்த நிலையில் பொன்னம்பலம் மேடு பகுதியில் அத்துமீரி நுழைந்த பூஜை நடத்தியது தொடர்பாக நாராயணன் மீது பச்சை காணம் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேவசம்போர்டு மந்திரி விஜயகுமாரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையிடம் வலியுறுத்தி உள்ளார்.

       இது குறித்து நாராயணன் கூறியதாவது “ நான் இப்போது திருச்சூர் வடக்குநாதர் கோவில் அருகில் வசித்து வருகிறேன். நான் செல்லும் கோவில்களில் சிறப்பு பூஜை செய்வது எனது வழக்கம். வனத்துறை போலீசாரின் அனுமதியின் பெயரில் பொன்னம்பலம் மேட்டுக்கு சென்று அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தினேன். ஐயப்பன் அருட்பார்வை விழும் பொன்னம்பலம் மேட்டில் பூஜை செய்தால் யாருக்கு என்ன பிரச்சனை? இது வனத்துறை அதிகாரிகளால் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பது எனக்கு தெரியாது அந்த வீடியோவில் இருக்கும் நபர்கள் அனைவரும் பூஜை பொருட்களை என்னுடன் கொண்டு வந்தவர்கள். நான் கைலாயம் சென்றபோது கூட அங்கு இதுபோல் பூஜைகள் செய்தேன். அனைவருக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்யப்பட்ட பூஜையே அன்றி வேறு ஒன்றும் இல்லை. இது தொடர்பாக யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை “இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com