சவுதி அரேபியாவின் மெக்காவில் அதிகப்படியான வெப்பத்தால், சுமார் 19 பேர் பலியாகியுள்ளதாக ஈரான் மற்றும் ஜோர்டன் அரசுகள் அறிவித்துள்ளன.
ஒருபக்கம் உலகம் முழுவதும் போர், தீவிரவாதம், சர்வாதிகாரம், வறுமை போன்ற பல பிரச்சனைகள் தலை விரித்தாடும் நேரத்தில், மற்றொரு பக்கம் காலநிலை மாற்றத்தினால் பல பிரச்சனைகளும் வருகின்றன. உலகின் பல பகுதிகளில் காலநிலை மாற்றத்தால், அதிக வெப்பம் அல்லது அதிக மழை என வலுவானப் பேரிடர்களை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
காலநிலை மாற்றத்தால், சமீபக்காலமாக வறட்சியான பாலைவனப் பகுதிகளிலும் கனமழை பெய்கிறது. மே மாதம் துபாயில் வரலாறு காணாத அளவு மழை பெய்தது. இதனைத்தொடர்ந்து சவுதியிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.
இப்படியிருந்த சூழ்நிலையில், இந்த மாதம் சவுதியில் வெப்ப அலை கடுமையாக இருந்து வருகிறது. இதற்கு முன்னதாகவே ஐநாவும் உலக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதாவது, உலகில் அடுத்த 20 ஆண்டுகளில் வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஸியஸ் அளவுக்கு உயரப் போகிறது என்று கூறியது.
அந்தவகையில், உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான ஹஜ், இஸ்லாமியர்களின் ஐந்து தூண்களில் ஒன்றாகும். அனைத்து இஸ்லாமியர்களும் ஒரு முறையாவது இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் மெக்காவில் உள்ள ஹஜ்ஜிற்கு பயணம் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு சுமார் 18 லட்சம் பேர், புனித யாத்திரைக்காக மெக்காவிற்கு வருவார்கள் என தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அங்கு தற்போது வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டியுள்ளது.
சவுதி அரேபியாவின் மெக்காவிற்கு வந்த ஹஜ் பயணிகளில் 19 பேர், உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலையின் தாக்கத்தால் இந்த உயிரிழப்புகள் நேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோர்டான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ஜோர்டானைச் சேர்ந்த 14 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். 17 பேர் காணவில்லை. அதிகப்படியான வெப்ப அலையின் காரணமாக வெயிலின் தாக்கத்தால் மரணம் நிகழ்ந்துள்ளது.” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய ரெட் கிரசண்ட் தலைவர் பிர்ஹோசைன் கூலிவாண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டு ஹஜ்ஜின் போது மெக்கா மற்றும் மதீனாவில் இதுவரை ஐந்து ஈரானிய பயணிகள் உயிரிழந்துள்ளனர்." என்று தெரிவித்துள்ளார்.