‘தீவிரவாதத்தை நியாயப்படுத்த முடியாது’ ஷாங்காய் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு!

‘தீவிரவாதத்தை நியாயப்படுத்த முடியாது’ ஷாங்காய் மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு!

டந்த 2001ம் ஆண்டு துவங்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. ‘எஸ்.சி.ஓ.’ எனப்படும் இந்த அமைப்பின் இந்த ஆண்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று இருக்கிறது. கோவாவில் நடைபெறும் இந்த ஆண்டுக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக உறுப்பினர்களாக இருக்கும் பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த அழைப்பை ஏற்று பாகிஸ்தான் சார்பாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, சீன வெளியுறவு அமைச்சர் குயின் கேங் உள்ளிட்டோர் நேற்று கோவா வந்து சேர்ந்தனர். அதைத் தொடர்ந்து இன்று (மே 5) நடைபெற்ற இந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டுக்கு வருகை தந்த சீனாவின் குயின் கேங், பாகிஸ்தானின் பிலாவல் பூட்டோ, ரஷ்யாவின் செர்ஜி லாவ்ரோவ் உள்ளிட்ட அனைத்து நாட்டின் வெளியுறவு அமைச்சர்களையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனித்தனியாக வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து இந்த மாநாட்டில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் குறையாமல் தொடர்ந்து வருகிறது. பயங்கரவாதத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட அதன் அனைத்து வடிவங்களும் உடனே நிறுத்தப்பட வேண்டும். பயங்கரவாதத்துக்கு நிதி செல்லும் பாதைகள் அனைத்தும் நிச்சயம் மூடப்பட வேண்டும்.

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உண்மையான நோக்கங்களில் ஒன்றாகும். எஸ்.சி.ஓ.வின் சீர்திருத்தம் மற்றும் நவீனமயமாக்கல் பற்றிய விவாதம் ஏற்கெனவே துவங்கிவிட்டது என்பதை நான் மகிழ்ச்சியுடன் கவனிக்கிறேன். ஆங்கிலத்தை எஸ்.சி.ஓ.வின் மூன்றாவது அதிகாரப்பூர்வ மொழியாக்க  வேண்டும் என்ற இந்தியாவின் நீண்ட நாளைய கோரிக்கைக்கு உறுப்பு நாடுகளின் ஆதரவையும் கோருகிறேன்” என்று அவர் பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com