டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி பணி ஜூன் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது வரை நாத்து நடும் பணி கூட முழுமையாக முடிவடையவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கர்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 53 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு தர வேண்டும். ஆனால் தற்போதைய ஆண்டில் 20 டிஎம்சி தண்ணீர் வரை மட்டுமே கர்நாடக அரசு வழங்கி உள்ளது. இதனால் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு இன்னும் தண்ணீர் செல்லவில்லை. இதனால் குறுவை சாகுபடியை இன்னும் தொடங்க முடியாமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
தமிழக முதல்வர் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி நீரை திறந்து விட்டார். ஆனால் இன்றுவரை டெல்டா மாவட்டத்தின் கடை கோடி பகுதிகளுக்கு நீர் சென்றடையவில்லை. பல பகுதிகளில் போர்வெல மூலமாகவும், இதர நீர் தேவைகளை ஏற்படுத்தியுமே விவசாயகள் குறுவைக்கான பணியை மேற்கொண்டுள்ளனர்.
குறுவை சாகுபடியில் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விளைச்சல் நடைபெறும் என்று முதல்வர் கூறியிருந்தார். ஆனால் 1. 50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே குறுவை சாகுபடி தற்போது தொடங்கப்பட்டு இருப்பதாகவும், மீதமுள்ள 3. 50 லட்சம் ஏக்கர் விவசாய நிலத்திற்கு தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையினுடைய நீர் வரத்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் 43 நாட்களுக்கு மட்டுமே விவசாயம் செய்ய தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழக மற்றும் கேரளாவில் பருவ மழை போதிய அளவு இல்லாததால் நீர்வரத்து மேலும் குறைந்து இருக்கிறது.
இப்படி தண்ணீர் பிரச்சனையால் குறுவை சாகுபடி பொய்த்து போகும் அபாயம் உள்ளது. அதோடு 28 நாட்களில் நடவேண்டிய நடவு பணிக்கு ஆட்கள் கிடைக்காததால் 35 நாட்களுக்கு மேலாக நடவு பணி மேற்கொள்ளப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் நடப்பு ஆண்டில் குறுவை சாகுபடி நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும், இதனால் வருங்காலங்களில் விலைவாசியின் உயர்வு மேலும் அதிகரிக்க கூடும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு கர்நாடகா அரசுக்கு நெருக்கடி கொடுத்து தமிழகத்திற்கான நீரை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் டெல்டா மாவட்ட விவசாயிகள்.