போலி மருத்துவர்கள் எச்சரிக்கை... சேலத்தில் கைது எதிரொலி.

போலி மருத்துவர்கள் எச்சரிக்கை... சேலத்தில் கைது எதிரொலி.
Published on

 “காமாலை கண்டவருக்கு கண்டவரெல்லாம் மருத்துவர்” என்பார்கள். காரணம் எப்படியாவது நோய் போனால் போதும் என்ற எண்ணம். இது ஒருபுறம் இருக்க, இப்படி தாங்கள் சொல்லி நோய்கள் தீரும்  பட்சத்தில் உண்மையாகவே தங்களை படிக்காத  மேதையாக நினைத்து மருத்துவராக மாறி கிளினிக் வைக்கும் அளவுக்கு போய் விடுவார்கள் சிலர். வெறும் அனுபவத்தை மட்டும் வைத்துக்கொண்டு தங்களை நம்பி வருபவர்களின் உயிருடன் விளையாடுவது இவர்களுக்கு சிறிய விஷயமாக தெரிகிறது. ஆனால் இந்த மாதிரி போலி  மருத்துவர்களின் செயல் எத்தனை ஆபத்தானது என்பதை இந்த செய்தி வலியுறுத்தி விழிப்புணர்வைத் தருகிறது. 

       சேலம் சரகத்தில் மட்டும் கடந்த பத்து நாளில் சோதனை செய்ததில் 15 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  முறையற்ற வைத்தியம் பார்ப்போர் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

      தமிழ்நாடு முழுவதும் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல் ஏதாவது ஒரு மருத்துவரிடம் உதவியாளராக பணிபுரிந்து அனுபவம் அடிப்படையில் ஆங்கில மருத்துவம் பார்க்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக டி ஜி பி சைலேந்திரபாபு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளார். இதன் பேரில் சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம் நாமக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களிலும் போலி மருத்துவர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க சரக டி ஐ ஜி  ராஜேஸ்வரி அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒன்றாம் தேதியிலிருந்து அந்தந்த எஸ்பிக்கள் தலைமையில் போலி மருத்துவர்கள் குறித்து போலீசார் விசாரித்து கண்டறிந்து கைது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

         இந்த வகையில் காவலர்கள் நடத்திய தீவிர தேடலில் கடந்த 10 நாட்களில் சேலம் மாவட்டத்தில் மட்டும் முறையாக மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த சங்ககிரியை சேர்ந்த பன்னீர்செல்வம், தேவராஜன் ஓமலூரை சேர்ந்த மணிகண்டன், வாசுதேவன், ஆண்ட்ரோஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஐந்து பேரும் தருமபுரி மாவட்டத்தில் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆக இதுவரை சுமார்  15க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். 

      இது குறித்து சரக டிஐஜி ராஜேஸ்வரி கூறுகையில்...

“சேலம் சரகத்தில் மருத்துவம் படிக்காமல் முறையற்ற வைத்தியத்தில் யாரேனும் ஈடுபட்டால் அவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தீவிர கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்களும் உரிய முறையில் செயல்படும் மருத்துவமனைக்கோ அல்லது முறையான பயிற்சி பெற்ற மருத்துவர்களிடமோ சென்று முறையாக சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.. எங்கேயும் போலி மருத்துவர்கள் இருப்பது தெரிந்தால் போலீசாருக்கு பொதுமக்கள் உடனே தகவல் கொடுக்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

      உணவு முதற்கொண்டு நம் வாழ்க்கையில் அனைத்தும் போலிகள் கலந்து வரும் இக்காலத்தில் உயிருக்கே உலை வைக்கும் மருத்துவத்திலும் போலி மருத்துவர்கள் இருப்பது கவலைக்குரிய விஷயம். மக்களே உஷாராக இருப்போம். போலி மருத்துவர்களைக் கண்டால் காவலரிடம் தெரிவிப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com