போலி கௌரவ டாக்டர் பட்ட விவகாரம்! 7 பிரிவுகளில் வழக்கு பதிவு!

போலி கௌரவ டாக்டர் பட்ட விவகாரம்! 7 பிரிவுகளில் வழக்கு பதிவு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட விவகாரத்தில் நிகழ்ச்சி ஏறபாட்டாளர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவினை ஏற்பாடு செய்த விழா ஏற்பாட்டாளர் ஹரிஷ் தற்போது தலைமறைவாகி உள்ளார் . அவரை தேடும் பணியில் கோட்டூர்புரம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போலி டாக்டர் பட்ட விவகாரம் குறித்து 7 பிரிவுகளில் கோட்டூர்புர காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு சமீபத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட நிலையில், இவை போலியானது என்றும் இந்த கௌரவ டாக்டர் பட்டத்திற்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கலந்துகொண்ட கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் ஆடிட்டோரியத்தில் கடந்த ஞாயிறன்று தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்கு அனுமதி பெறப்பட்டிருந்தது. இதில், இசையமைப்பாளர் தேவா, நடன இயக்குநர் சாண்டி, சின்னத்திரை பிரபலமான ஈரோடு மகேஷ், யூடியூப் பிரபலங்களான கோபி – சுதாகர் உட்பட 30க்கும் மேற்பட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தை கொடுத்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் விழா நடத்த அனுமதி வாங்கி விட்டனர் எனவும், அதே போல் அண்ணா பல்கலைக்கழக பெயரை கூறி வள்ளிநாயகம் அவர்களையும் அந்த கும்பல் ஏமாற்றி சிறப்பு விருந்தினராக வரவழைத்து விட்டனர் எனவும் குற்றம் சாட்டினார் துணை வேந்தர் வேல்ராஜ்.

சர்ச்சையில் சிக்கியுள்ள சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம், இதுபோன்ற கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கும் நிகழ்வை இதற்கு முன்பே நடத்தியுள்ளது. நடிகர்கள் ராகவா லாரன்ஸ், யோகிபாபு, இசையமைப்பாளர் டி. இமான் போன்ற பிரபலங்களுக்கு இந்த ஆணையம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் கடந்த காலங்களில் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழங்கப்பட்ட பட்டங்கள் அனைத்தும் போலியான பட்டங்கள் என தெரியவந்ததை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹரிஸ் மீது ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com