கடந்த அக்டோபர் மாதம்தான் குஜராத்தில் போலி அரசு அலுவலகம் அமைத்து 4 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் தெரிய வந்த நிலையில், தற்போது போலி சுங்கச்சாவடி அமைத்து பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது ஒரு கும்பல்.
இந்த மோசடிக்காரர்கள், குஜராத் பாமன்போர்ட் கட்ச் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை தவிர்த்து, வேறு வழியில் மக்கள் செல்லும் இடத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தில் போலி சுங்கச்சாவடி அமைத்து, இத்தகைய துணிகர ஸ்மார்ட் மோசடி செய்துள்ளனர். இப்படியெல்லாம் செய்வதற்கு அவர்களுக்கு எப்படி யோசனையும், தைரியமும் வந்தது என்பது தான் தெரியவில்லை.
இந்த போலி சுங்கச்சாவடியில் அரசு கட்டணத்தை விட பாதி விலை மட்டுமே வசூலிக்கப்படுவதால், வாகன ஓட்டிகளும் இந்த வழியையே அதிகமாக பயன்படுத்தி உள்ளனர். எனவே இதுகுறித்து யாரும் அரசிடம் புகார் கூறவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் நடந்து வரும் இந்த மோசடியில் இதுவரை மொத்தம் 75 கோடிக்கும் மேல் மோசடி கும்பல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த போலி சுங்கச்சாவடி குறித்த தகவல் மோர்பி மாவட்ட ஆட்சியருக்கு வந்ததைத் தொடர்ந்து, இந்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாவட்ட ஆட்சியரும் இதை முழுமையாக ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுவரை எத்தனையோ விதமான ஊழல்களை நாம் பார்த்திருந்தாலும், அரசையும் மக்களையும் ஏமாற்றி போலியாக ஒரு சுங்கச்சாவடியையே அமைத்து ஒரு கும்பல் மோசடி செய்திருப்பது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.