இரண்டு ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கிய குடும்பம்.

இரண்டு ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கிய குடும்பம்.
Published on

ப்படிக்கூட இருப்பார்களா என்று ஆச்சர்யப்பட வைப்பவர்கள் பற்றிய செய்தி இது. கொரானா எனும் பெருந்தோற்று மக்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது உண்மைதான். இருப்பினும் பசிக்கும் வயிற்றுக்கு உணவு வேண்டுமே? அன்றாடம் உழைத்தால்தானே வாழ முடியும்? ஆனால் இதை தவிர்த்து வீட்டுக்குளேயே இரண்டு வருடங்களாக முடங்க முடியுமா? முடியும் என்று சொல்லும் பெண்களைப் பற்றிய செய்திதான் இது.

நாகர்கோவிலில் மூன்று பெண்கள் உள்பட நான்கு பேர் அடங்கிய குடும்பத்தினர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டின் கதவு ஜன்னலையும் கூட திறக்காமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த சம்பவம் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் நேசமணி நகர் பழைய ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்த ஒரு வீட்டில்  50 வயதுப் பெண்மணியுடன் அவரின் 25 வயதுக்கு மேற்பட்ட இரண்டு மகள்களும் உடன் வயது முதிர்ந்த உறவினர் ஒருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் வசித்த வீடு கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்பக்கமாக பூட்டியே கிடந்துள்ளது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவ்வப்போது அந்த வீட்டின் குடும்பத்தலைவியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர் வீட்டுக்குள் இருந்து வெளியே வரவே இல்லை. கொரானா அச்சம் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பதாக தகவல் பரவியது.

இது பற்றி சமூக நலத்துறைக்கும் புகார் சென்றது. உடனே சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி தலைமையில் நேற்று அங்கு வந்த  அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்று அவர்களை வெளியே வரும்படியும் கதவைத் திறக்கும்படியும் கூறினர். ஆனால் அவர்கள் ஜன்னலை திறந்து எட்டிப் பார்ப்பது செல்போனை வைத்துக் கொண்டு படம் எடுப்பது என்று  வேடிக்கை காட்டிக்கொண்டே இருந்தனரே தவிர   வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை.

இதை தொடர்ந்து நேசமணி நகர் காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் அடுத்தடுத்து அங்கு விரைந்தனர். பின்னர் வீட்டின் வெளிப்பக்க கேட்டை உடைத்து அதிகாரிகளும் காவலர்களும் உள்ளே சென்றனர். அதே சமயத்தில் வீட்டுக்குள்ள இருந்த கேட்டை அந்த குடும்பத்தினர் திறக்கவே இல்லை.

அத்துடன் “வெளியே வர மாட்டோம் கேட்டையும்  திறக்க மாட்டோம்” என்றனர். எனவே கேட்டின் மறுபுறத்தில் இருந்த அதிகாரிகளும் போலீசாரும் வீட்டுக்குள் இருந்த அவர்களிடம் வெளியே இருந்தே  விசாரித்தனர்.

அப்போது வீட்டின் குடும்பத்தலைவியான அந்தப்பெண் கூறுகையில் “எனக்கு சொந்தமான கடை மணிமேடை பகுதியில் இருக்கிறது. அந்த கடையை வாடகைக்கு விட்டுள்ளோம். அந்த கடைக்காரர் கடையின் முன் கண்ணாடி வைத்துள்ளார். அந்த கண்ணாடியை எடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகள் எங்களிடம் வந்து கேட்கிறார்கள். நாங்கள் வெளியே வந்தால் எங்களிடம் விசாரணை நடத்துவார்கள். மேலும் கொரோனா பரவல் வேறு இன்னும் இருக்கிறது எனவே நாங்கள் வெளியே வர மாட்டோம்” என்றார்.

இதனை அடுத்து  சம்பந்தப்பட்ட கடையை வாடகைக்கு நடத்தி வரும் கடைக்காரர் காலி செய்து தரும்படி கேட்டு கலெக்டருக்கு மனு  எழுதித் தரும்படி அவரிடம் அதிகாரிகள் கேட்டனர். அதன்படி அவரும் மனு எழுதி கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து மனுவை வாங்கிக்கொண்டு அதிகாரிகள் புறப்பட்டனர் கடைசி வரை அந்தப் பெண்கள் வீட்டுக்கதவைத் திறக்கவே இல்லை.

 இது பற்றி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டில் தாய் அவருடைய  மகள்கள் மற்றும் ஒரு உறவினர் என நான்கு பேர் உள்ளனர். அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.  ஆனால் அந்தப் பெண்ணின் இரண்டு மகள்களும் நன்கு படித்தவர்கள் என்றாலும் சற்று மனநலம் பாதிக்கப் பட்டவர்கள் போல தெரிகிறார்கள். அவர்களுக்கு தேவையான அன்றாட பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு நிறைய கடைகள் உள்ளன. அந்த கடைகள் மூலம் மாதம் தோறும் வாடகை வருகிறது. அதை வைத்துக்கொண்டு செலவு செய்து வீட்டுக்குளேயே இருக்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்று கூறினர்.

சுதந்திரப் பறவைகளாக வெளிக்காற்றை சுவாசித்தாலே இவர்களின் பயம் அகன்று தெளிவும் தன்னம்பிக்கையும் கிடைக்கும். நான்கு பேரிடம் பழகினால் துணிவு வரும். இதை விடுத்து  இப்படி வீட்டுக்குள் முடங்குவதால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com