பிரபல இயக்குநரும் நடிகருமான மனோபாலா காலமானார்!

பிரபல இயக்குநரும் நடிகருமான மனோபாலா காலமானார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதற்கொண்டு பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கியவரும், முன்னணி நகைச்சுவை நடிகருமான மனோபாலா திடீரென இன்று காலமானார். இவரது மறைவு திரைப்பட உலகைச் சார்ந்தவர்களை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அவரது மறைவுக்கு திரைப்படத் துறையைச் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

பன்முகத் திறமை கொண்ட மனோபாலா, இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இவர் தொடர்ந்து படப்பிடிப்புகளில் வழக்கம் போல் கலந்து கொண்டார். இதற்கிடையில் கல்லீரல் பிரச்னை காரணமாக வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று உயிரிழந்து இருக்கிறார்.

தஞ்சை மாவட்டம், திருவையாறைச் சொந்த ஊராகக் கொண்ட மனோபாலா, சிறுவயது முதற்கொண்டு சினிமா மீது தீராத ஆசைக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் நட்பு இவருக்குக் கிடைக்க, அதன் மூலம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார். ’புதிய வார்ப்புகள்’ திரைபடத்தின் மூலம் உதவி இயக்குநராக தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய மனோபாலா, நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து, கார்த்திக், சுஹாசினி நடித்த ஆகாய கங்கை திரைப்படத்தை முதன் முதலாக இயக்கினார். அதைத் தொடர்ந்து, பிள்ளை நிலா,ஊர்க்காவலன், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான், சிறை பறவை, மல்லுவேட்டி மைனர், கருப்பு வெள்ளை, நந்தினி, நைனா உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி இருக்கிறார்.

சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த மனோபாலா, நட்புக்காக திரைப்படத்தின் மூலம் முழுநேர நடிகராக மாறினார். அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம், சூர்யா, மாதவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களை மிகவும் கவர்ந்தார். சென்னை, சாலிகிராமத்தில் வசித்து வந்த நடிகர் மனோபாலாவுக்கு உஷா என்ற மனைவியும், ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர். அவரது மகன் வெளிநாட்டில் தங்கிப் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் நடிகர் மனோபாலாவின் திடீர் மரணம் தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com