மலையாள இலக்கிய உலகின் பிரபல ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞரான 'ஆர்டிஸ்ட் நம்பூதிரி' மறைவு!

மலையாள இலக்கிய உலகின் பிரபல ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞரான 'ஆர்டிஸ்ட் நம்பூதிரி' மறைவு!

மலையாள இலக்கியத்தில் பல புராணக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த கலைஞர் நம்பூதிரி என்று அழைக்கப்படும் கே.எம்.வாசுதேவன் நம்பூதிரி வெள்ளிக்கிழமை அதிகாலை மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்கல்லில் காலமானார். அவருக்கு வயது 97.

அவர் தனது தனித்துவமான முப்பரிமாண ஓவியங்கள் மூலம் கேரளாவில் ஓவியம் மற்றும் சிற்பக்கலையின் பொற்காலத்தை ஏற்படுத்தியவர். வயது மூப்பு தொடர்பான நோய்களுக்காக கோட்டக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.21 மணியளவில் காலமானார்.

செப்டம்பர் 13, 1925 அன்று பொன்னானியில் உள்ள கருவாட்டு இல்லத்தில் பரமேஸ்வரன் நம்பூதிரி மற்றும் ஸ்ரீதேவி அந்தர்ஜனம் ஆகியோருக்குப் பிறந்த கலைஞர் நம்பூதிரி, மிகச் சிறிய வயதிலேயே தனது வீட்டுச் சுவர்களில் கரித்துண்டுகளைப் பயன்படுத்தி தனது கிராமத்தில் தான் நேரில் கண்ட மனிதர்கள், மற்றும் சந்திக்க வாய்த்த மனிதர்களின் கோட்டோவியங்களை வரையத் தொடங்கினார். அத்துடன் அவர், தனது குழந்தைப் பருவத்தில் சமஸ்கிருதத்திலும் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்திலும் பாடங்களைக் கற்கத் தொடங்கி இருந்தார்.

Editor 1

பிரபல கலைஞர் வரிக்காச்சேரி கிருஷ்ணன் நம்பூதிரி தான் அவரை மெட்ராஸ் நுண்கலை கல்லூரிக்கு அழைத்துச் சென்றார், அங்கு அவர் கே.சி.எஸ் பணிக்கர் போன்ற ஜாம்பவான்களால் வளர்க்கப்பட்டார். அப்படித்தான் பின்னர் எம் டி வாசுதேவன் நாயர், வி கே நாராயணன்குட்டி நாயர் (விகேஎன்) போன்ற பழம்பெரும் எழுத்தாளர்களின் காவியக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் வாய்ப்பு நம்பூதிருக்குக் கிடைத்தது.

எம்.டி.வாசுதேவன் நாயர் ஒருமுறை நம்பூதிரியின் பீமனை ரெண்டாம்மூழத்தில் (மகாபாரத பீமன் கதாபாத்திரத்தை உணர்வுப்பூர்வமாக அணுகிய மலையாள நாவல், இது தமிழில் இரண்டாமிடம் தலைப்பில் வாசிக்கக் கிடைக்கிறது) பார்த்து விட்டு அவரது வரி ஓவியங்கள் தனித்தன்மை வாய்ந்தவை என்று கூறியிருந்தார். வி.கே.நாராயணன் குட்டியோ அவரை 'வரைபடங்களின் பரமசிவன்' என்று அழைத்தார்.

நம்பூதிரியின் வரி ஓவியங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை, அவை கேரளாவின் கிராமிய வாழ்க்கையின் எளிமையை உயிர்ப்பித்தன. ஒரு சிற்பியாக, அவர் மரம், உலோகம், கல், சிமெண்ட் மற்றும் களிமண் போன்ற பலவிதமான அம்சங்களைக் கொண்டு சிர்பங்களை உருவாக்கியிருக்கிறார். சமகலிகா மலையாளம், கலா கௌமுதி மற்றும் மாத்ருபூமி போன்ற இலக்கிய இதழ்களால் தொடராக

வெளிவந்த கதைகள் மற்றும் நாவல்களில் பல கதாபாத்திரங்களுக்கு அவரது ஓவியங்கள் உயிர் கொடுத்தன.

நடிகர் மோகன்லாலின் வேண்டுகோளின்படி வரையப்பட்ட சங்கராச்சாரியாரின் சௌந்தர்ய லஹரியை அடிப்படையாகக் கொண்ட விளக்கப்படங்களுக்கு அவர் அதிக பாராட்டுகளைப் பெற்றார். அதுமட்டுமல்ல நம்பூதிரி, இயக்குனர் அரவிந்தனின் உத்தராயணம், காஞ்சனா சீதை போன்ற படங்களுக்கு கலை இயக்குநராகவும் பணியாற்றியவர்.

கேரள லலித்கலா அகாடமியின் ராஜா ரவிவர்மா விருது மற்றும் மாநில குழந்தைகள் இலக்கிய கழக விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவருக்கு மிருணாளினி என்ற மனைவியும், பரமேஸ்வரன், வாசுதேவன் என்ற மகன்களும் உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com