தனது சொகுசு காரை டிப்ஸாகக் கொடுத்த பிரபல யுடியூபர்.

தனது சொகுசு காரை டிப்ஸாகக் கொடுத்த பிரபல யுடியூபர்.
Published on

ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றால் பரிமாறும் நபர்களுக்கு 10,20 ரூபாய் டிப்ஸ் கொடுத்து பார்த்திருப்பீர்கள். சிலர் அதிகபட்சமாக 500, 1000 கூட கொடுப்பார்கள். ஆனால் காரையே பரிசாகக் கொடுத்ததைக் கேள்விப்பட்டதுண்டா?

அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு சமீபத்தில் நடந்திருக்கிறது. பிரபல யூட்யூபர் ஒருவர் தனக்கு உணவு பரிமாறிய பெண்ணுக்கு விலையுயர்ந்த டொயோட்டா காரை பரிசாக வழங்கியுள்ளார். இது சார்ந்த காணொளி தற்போது இணையத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. தற்போதுள்ள இணைய யுகத்தில் பல தொழிலதிபர்கள், சினிமா நடிகர்களுக்கு இணையாக யூடியூபர்களும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். லட்சங்களில் தொடங்கி கோடிகள் வரை யூடியூபர்கள் சம்பாதிக்கிறார்கள் என்பதை சமீப காலமாக நாம் பார்த்து வருகிறோம். 

தங்களுடைய வருமானத்தை அதிகரிக்க எந்த நிலைக்கு வேண்டுமானாலும் செல்லும் அளவிற்கு அவர்கள் செயல்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம், யூட்யூபில் ஒரு காணொளி எவ்வளவு பார்வைகள் பெறுகிறதோ அதற்கு ஏற்றவாறு பணம் கிடைக்கும். பார்வையையும் தனக்கான சப்ஸ்கிரைபரையும்  அதிகரிக்க பல வித்தியாசமான முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் 'மிஸ்டர் பீஸ்ட்' என்ற பிரபல யூட்யூப் சேனலை நடத்தி வரும் ஜிம்மி டொனால்ட்சன் என்பவர்தான், காரை டிப்ஸாக வழங்கி அனைவரும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். 

சமீபத்தில் பிரபல யூட்யூபரான மிஸ்டர் பீஸ்ட், உணவகம் ஒன்றிற்கு சாப்பிடச் சென்றிருக்கிறார்.  அங்கு தனக்கு பரிமாற வந்த பெண்ணிடம் இதுவரை நீங்கள் வாங்கிய அதிகபட்ச டிப்ஸ் தொகை எவ்வளவு என்று கேட்டதற்கு, அந்த பெண்ணும் 50 டாலர்கள் எனக் கூறியுள்ளார். மேலும் உங்களுக்கு யாராவது ஒரு காரை டிப்ஸாகத் தந்ததுண்டா எனக் கேட்கவே, அந்த பெண்ணும் இல்லை எனக் கூறியுள்ளார். பின்னர், அப்படியானால் நான் தருகிறேன் என்று கூறி தன்னுடைய விலை உயர்ந்த காரின் சாவியை அந்த பெண்ணுக்கு கொடுத்தார். 

அந்த காணொளியில், இதை துளியும் எதிர்பாராத அந்த பெண் சில நிமிடம் எதுவும் பேசாமல் நிற்பதும், பின்னர் ஆச்சரியத்திற்கு உச்சிக்கே செல்வதையும் நாம் காண முடிகிறது. இது சார்ந்த காணொளியை தனது டிக் டாக்கில் ஜிம்மி டொனால்ட்சன் பகிர்ந்துள்ளார். இந்த காணொளி தற்போது உலகெங்கிலும் அதிவேகமாக பரவி வருகிறது. 

இதைப் பற்றி பலரும், இவர் வெறும் வீண் விளம்பரத்திற்காக மட்டுமே இப்படி செய்கிறார் என கருத்து தெரிவித்து வருகிறார்கள். இவர் பரிசாக அளித்த காரில் இவருடைய நிறுவனம் சார்ந்த லோகோக்கள் ஒட்டப்பட்டிருப்பதை வைத்து, தனது சாக்லேட் நிறுவனத்தை விளம்பரப்படுத்தவே இவ்வாறு செய்கிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 

என்னதான் பலர் பல்வேறு விதமாகக் கூறினாலும், இவர் தனது காரை டிப்ஸாகக் கொடுத்தது மக்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்டு வருகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com