ரயில்வே நிர்வாகத்தில் கொரோனாவுக்கு முன்பு வரை மூத்த குடிமக்களுக்குக் கட்டண சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. கொரோனாவிற்கு பின் இச்சலுகை மூன்று வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. கொரோனா காலத்தில் ரயிலில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை தற்போது மீண்டும் அமல்படுத்தக்கோரி நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.
ரயில்வே துறையில் குளிர்சாதன வசதியுள்ள முதல் மற்றும் இரண்டாம் தர பெட்டிகள் தவிர்த்து மற்ற அனைத்து பெட்டிகளிலும் மூத்த குடிமக்களுக்குக் கட்டண சலுகைகள் வழங்கப்பட்டன. அதாவது 60 வயதுக்கு மேல் உள்ள ஆண்களுக்கு இந்த பெட்டிகளில் 40 சதவீதமும், 58 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதமும் கட்டணம் தள்ளுபடி வழங்கப்பட்டது.
கொரோனாவை காரணம் காட்டி மார்ச் 2020ல் அந்த சலுகைகளை ரயில்வே நிறுத்தி இருந்தது. இதனைத் திரும்ப அளிக்க ராதாமோகன் சிங் தலைமையிலான நிலைக் குழு இரண்டாவது முறையாக ரயில்வேக்கு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனாவுக்கு முன்பு அதாவது 2019-20 இல் ரயில்வேயில் பயணிகள் டிக்கெட்டில் மட்டும் 59 ஆயிரத்து 837 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டு வந்தது. கொரோனா காரணமாக ரயில்வேயில் பெரிய இழப்பு சந்தித்தால், மானியத்தை ரயில்வே நிறுத்தியதாக ரயில்வே அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ரயில்வே துறையும் குறிப்பிட்ட வளா்ச்சியைக் கண்டுள்ளது. எனவே மீண்டும் கட்டண சலுகை தரவேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசுக்கு வலியுறுத்துள்ளனர்.
ஆனால், ரயில்வே துறை அமைச்சகம் பயணக் கட்டணச் சலுகை நடைமுறையைக் கொண்டு வருவது குறித்து எவ்வித உடனடி திட்டம் இல்லை.
ஏற்கெனவே, அனைத்து ரயில் பயணிகளுக்கும் 50-55 சதவீத பயணக் கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.