சூரிய மின்சக்தி குறித்து விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை!

சூரிய மின்சக்தி குறித்து விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை!
Published on

PM KUSUM (பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தன் மஹாபியன் யோஜனா) திட்டமானது இந்திய அரசாங்கத்தால் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத் துறையில் டீசலை நீக்குவதற்கான ஆதாரங்களை வழங்கவும் தொடங்கப்பட்டது. PM-KUSUM திட்டத்திற்கு மார்ச் 2019 இல் நிர்வாக ஒப்புதல் கிடைத்தது. ஜூலை 2019 ல் அதற்கான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டன. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் (MNRE) நாடு முழுவதும் சோலார் பம்புகள் மற்றும் பிற புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

அந்த திட்டத்தின் கீழ், விவசாயி தனியாக அல்லது பல விவசாயிகள் சேர்ந்து, தங்களின் நிலத்தில் 500 கிலோ வாட் முதல் 2 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையம் அமைக்கலாம்.

அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை சொந்த தேவைக்கு பயன்படுத்தியது போக, மின் வாரியத்திற்கும் விற்கலாம். இதனால் விவசாயிகளுக்கு ஆண்டு முழுதும் நிரந்தர வருவாய் கிடைக்க ஒரு வாய்ப்பு ஏற்படும்.

தமிழகத்தில் பிரதமரின் சூரிய மின்சக்தி திட்டத்தின் கீழ், சூரியசக்தி மின் நிலையம் அமைக்கும் விவசாயிகளிடம் இருந்து, அதிகபட்சம், யூனிட்டுக்கு 3.30 ரூபாய் என்ற விலையில், 420 மெகா வாட் வாங்க, பிப்ரவரியில் மின் வாரியம் 'டெண்டர்' கோரியது.

அதில், இரண்டு விவசாயிகள், 3 மெகா வாட்டுக்கு மட்டும் மின் நிலையம் அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதை, மின் வாரியம் ஏற்கும்பட்சத்தில், 25 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்யப்படும்.

விவசாயிகளிடம் கூடுதல் விலையில் மின்சாரம் வாங்குவதற்கு இழப்பீடாக, மத்திய அரசு, கொள்முதல் அடிப்படையிலான ஊக்கத்தொகை என்ற பெயரில், 1 யூனிட்டிற்கு 40 காசு அல்லது 1 மெகா வாட்டிற்கு ஆண்டுக்கு 6.60 லட்சம் ரூபாய் வழங்குவது என நிணயித்துள்ளது. இரண்டில் எது குறைவோ, அந்த தொகையை, மின் வாரியத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கும்.

ஆனால், பிரதமரின் இந்த சூரியசக்தி மின் திட்டம் தொடர்பாக, விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை.

எனவே, கிராம அளவில் கூட்டங்களை நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தினால், இத்திட்டத்தில் மின் நிலையம் அமைக்க பலர் முன்வருவர் என, வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com