கொள்முதல் நெல்லின் ஈரப்பத அளவை 20 % ஆக  உயர்த்தியது  மத்திய அரசு! விவசாய சங்கங்கள் வரவேற்பு!

கொள்முதல் நெல்லின் ஈரப்பத அளவை 20 % ஆக உயர்த்தியது மத்திய அரசு! விவசாய சங்கங்கள் வரவேற்பு!

டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகளின் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. இதனால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிய மழை பெய்ததால் 2.15 லட்சம் ஏக்கருக்கு மேல் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. ஆய்வின் போது 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும் என்று ஆளுகின்ற அரசிடம் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இவை அனைத்தும் ஆய்வறிக்கையாக முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்திட வேண்டும் என்று கடிதம் எழுதினார். அதன் அடிப்படையில் மத்திய அரசின் ஆய்வு குழுவினர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தனர்.

சென்னையில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி யூனுஸ், பெங்களூரில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுடப் அதிகாரிகள் பிரபாகரன், போயோ ஆகியோர் அடங்கிய மத்திய குழு டெல்டா மாவட்டங்களில் 3 நாட்கள் ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை மத்திய அரசிற்கு தாக்கல் செய்தது.

ஏற்கெனவே 19 சதவீதம் ஈரப்பதம் கொண்ட நெல் கொள்முதலுக்கு அனுமதி உள்ள நிலையில், ஈரப்பத அளவை 20 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவு 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு விவசாய சங்கங்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது

logo
Kalki Online
kalkionline.com