தென்காசி ஆட்சியர் திடீர் இடமாற்றத்தைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம்!

தென்காசி ஆட்சியர் திடீர் இடமாற்றத்தைக் கண்டித்து    விவசாயிகள் போராட்டம்!
Published on

தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி புதிய மாவட்டம் தொடங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டு 3 ஆண்டுகளில் 4ஆவது மாவட்ட ஆட்சித் தலைவராக 6 மாதங்களுக்கு முன்பு ஆகாஷ் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகளில் திறம்பட செயல்பட்டதுடன், மாவட்டத்தின் முக்கிய நீர் நிலை ஆக்கிரமிப்புகளை பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் அகற்றி நடவடிக்கை எடுத்தார். மேலும் அரசின் நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்தி பொதுமக்கள் பயன்பெறுகின்ற வகையில் திட்டங்களை துரிதமாக செயல்படுத்தினார்.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி செயற்கை நீர்வீழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயம், இயற்கை வளம் பாதிக்கப்படுவதாக கலெக்டரிடம் விவசாயிகள் புகார் கூறியதைத் தொடர்ந்து, ஆய்வு குழு ஒன்றை அமைத்து ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக வடகரை பகுதியில் உள்ள சில செயற்கை நீர்வீழ்ச்சிகளை அகற்றி அதிரடி நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து தனியாரால் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சிகளை கண்டறிந்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தென்காசி மாவட்டத்தில் காலியாக இருந்த கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வை நேர்மையாக நடத்தி தேர்வின் மூலம் 53 கிராம உதவியாளர்களை தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் பயன்பெற முடியாமல் தவித்த அரசியல் கட்சியினர் ஆட்சியர் ஆகாஷ் குறித்து தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்த நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் தொழில் திறனாய்வு பிரிவு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

புதிய ஆட்சியராக ரவிச்சந்திரன் நியமனம் செய்யப்பட்டார். இதற்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தென்காசி மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷின் இடமாற்றத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அவரை மீண்டும் தென்காசி மாவட்டத்தில் பணி செய்ய உத்தரவிட கோரியும் மாவட்ட முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டினர்.

இந்த இடமாறுதல் உத்தரவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஏராளமானோர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஊத்துமலையில் நேற்று விவசாயிகள் திரண்டு ஆட்சியர் இடமாறுதல் உத்தரவுக்கு எதிராக தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்த நிலையில் இன்று காலை தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த அனைத்து விவசாய சங்கத்தினர் மாநிலத் துணைத் தலைவர்களான ஜாகிர் உசேன் கண்ணையா ஆகியோர் தலைமையில் நூதன முறையில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக வால்போஸ்டர்களை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்குமா, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷின் இடமாற்றம் ரத்து செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com