வேளாண் பட்ஜெட்டிற்கு விவசாயிகள் தந்த க்ரீன் சிக்னல்; மத்திய அரசின் ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு திட்டத்தை அடியொற்றி வந்த அறிவிப்புகள்!

வேளாண் பட்ஜெட்டிற்கு விவசாயிகள் தந்த க்ரீன் சிக்னல்; மத்திய அரசின் ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு திட்டத்தை அடியொற்றி வந்த அறிவிப்புகள்!
Published on

மிளகாய் மண்டலம், முருங்கை இயக்கம், பலா ஆராய்ச்சி மையம், மல்லிகை இயக்கம் என வேளாண் பட்ஜெட்டை சுவராசியப்படுத்தியிருக்கிறார்கள். நிதியமைச்சரின் நேற்றைய பிரதான பட்ஜெட்டை விட இன்று வேளாண்துறை அமைச்சரின் பட்ஜெட் புத்துணர்வை தந்திருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் வேளாண்துறைக்காக சிறப்பு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது ஆரம்பமானது. அதன்படி சென்ற ஆண்டு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது முறையாக 2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பபட்டது.

கடந்த கால பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட திட்டங்களால் விளைந்த பயன்களையும் பட்டியிலிட்டிருக்கிறார்கள். முன்னர் 10 முதல் 15 லட்சம் மெட்ரிக் டன் அளவு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நெல் சாகுபடி பரப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 1,930 ஹெக்டேர் வியசாய பரப்பு அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 63.48 லட்சம் ஹெக்டேராக சாகுபடி பரப்பு கடந்த ஆண்டில் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. நெல் உற்பத்திச் செலவை பொறுத்தவரை எந்த மாநிலத்தையும் விட தமிழ்நாட்டில்தான் அதிகம். இதை படிப்படியாக சரிசெய்யும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளன.

தானிய உற்பத்தி, கட்டமைப்பு வசதிகளில் கவனம் செலுத்தப்படுகிறது. இயற்கைப் பேரழிவுதான் தமிழக விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் பெய்த மழையில் டெல்டா பகுதியில் பயிர்கள் அழுகிப் போயிருந்தன. பயிர் காப்பீட்டுத் திட்டத்தை முழுமையாக அமலுக்கு கொண்டு வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2021-22ல் 40.74 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 26 லட்சம் விவசாயிகள் கடந்த ஆண்டில் பதிவு செய்திருப்பதாக வேளாண் அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தணைகள் சாத்தியமாகியிருகின்றன. வரும் ஆண்டில் 37 மாவட்டங்களில், 385 வேளாண் வட்டார மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவும் சில திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 60,000 சிறு குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்பு ₹15 கோடி செலவில் வழங்கப்படும். பருவத்திற்கு ஏற்ற பயிர் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை உழவர்களுக்கு பகிர்வதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும்.

வேளாண் பட்ஜெட்டின் ஹைலைட், ஒவ்வொரு பகுதியிலும் பிரபலமாக உள்ள பொருட்களை மார்க்கெட்டிங் செய்வதுதான். பலாவில் புதிய ரகங்கள், உயர் மகசூல், மதிப்பு கூட்டும் தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்காக ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும். 4300 ஹெக்டேரில் மல்லிகை சாகுபடி, மதுரை மல்லிகை இயக்கத்துக்கு ரூ7 கோடி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது.

தேனி, திண்டுக்கல்,கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கும் முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 ஏக்டரில் சாகுபடியினை உயர்த்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்து முருங்கை இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரித்திட மிளகாய் மண்டலம் அறிவிப்பு.

ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு பொருள் என்பது தேசிய அளவில் பா.ஜ.க அரசு முன்னெடுக்கும் One District One Product திட்டத்தின் நீட்சிதான் என்கிறார்கள், பா.ஜ.கவினர். எது எப்படியோ, வேளாண் பட்ஜெட்க்கு விவசாயிகள் மத்தியில் க்ரீன் சிக்னல் தரப்பட்டிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com