கார்ப்பரேட்டில் பணிபுரிபவர்களின் வாழ்க்கை எப்போது எப்படி மாறும் என்றே சொல்ல முடியாது. இப்படிப்பட்ட நிரந்தரமற்ற வேலைச் சூழலில், மெட்டா நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியருக்கு நடந்த சம்பவம் பலருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது உலகம் முழுவதும் டெக் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவது நாம் அறிந்த ஒன்றுதான். நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்தவர்களையே எதைப் பற்றியும் சிந்திக்காமல் வெளியேற்றி வருகிறது அந்நிறுவனங்கள். உலகெங்கிலுமுள்ள பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், பேஸ்புக், மைக்ரோசாஃப்ட், ட்விட்டர் போன்ற அனைத்துமே தங்களது ஊழியர்களை பாரபட்சம் பார்க்காமல் பணிநீக்கம் செய்கின்றனர்.
இதில் மெட்டா நிறுவனம் மட்டும், தனது மொத்த ஊழியர்களில் கிட்டத்தட்ட 18 சதவீதம் வரை பணிநீக்கம் செய்துவிட்டனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிரடியாக 10 ஆயிரம் பேர் பணியை விட்டு நீக்கப்பட்டனர். அதற்கு முன்பாக 2022 ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் மட்டும் 11 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்குமே முறையான பணிநீக்க அறிவிப்பு செய்யப்படவில்லை. திடீரென அதிகாலை 4 மணிக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு பணிநீக்க நோட்டீஸ் சென்றுள்ளது.
இதில் பலர், பாதி வழியில் வேலைக்கு வந்து கொண்டிருக்கும்போதே பணிநீக்க நோட்டீசைப் பெற்றுள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் அமெரிக்காவிலுள்ள மெட்டா நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக இவருக்கு குழந்தை பிறந்த 6 மணி நேரத்திற்குப் பின்பாக, அதிகாலை வேளையில் பணிநீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சொல்லப்போனால் அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்லாத நிலையில், பணியிலிருந்து நீக்கப்பட்ட அறிவிப்பு சென்றிருக்கிறது.
அந்த சூழ்நிலையில் அவர் என்ன செய்வதென்று தெரியாமல் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார். வாழ்க்கையின் மகிழ்ச்சிகரமான தருணத்தில் அவர் இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. இதன் பின்னர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அவர், தனது LinkedIn பக்கத்தில் அவரின் துயரத்தைப் பகிர்ந்துள்ளார்.
"நேற்று இரவு சரியாக 11:44 மணியளவில் எனக்கு மகன் பிறந்தான். அந்த நேரத்தில் எங்களுக்கு பலருடைய வாழ்த்துச் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. காலையில் மகிழ்ச்சியாக வீட்டுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தேன். சரியாக என் மகன் பிறந்து 6 மணி நேரம் கழித்து வந்த ஈமெயிலைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். எனது பணியை விட்டு என்னை நீக்கியுள்ளனர். அடுத்து என் வாழ்வில் என்ன நடக்கப் போகிறது என்பதை நினைத்தால் பயமாக இருக்கிறது. இதே நிறுவனம்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என் முதல் குழந்தை பிறந்தபோது, 6 மாத ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்கியது. இப்போது நான் தனிமையில் வாடுகிறேன்" என தன் சோகத்தைப் பதிவிட்டுள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் இந்த பணிநீக்க நடவடிக்கை, அந்நிறுவனத்தின் ஊழியர்களிடையே மிகுந்த அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.