மகாராஷ்டிரத்தில் அரசு அதிகாரியை கன்னத்தில் அறைந்த பெண் எம்.எல்.ஏ!

மகாராஷ்டிரத்தில் அரசு அதிகாரியை கன்னத்தில் அறைந்த பெண் எம்.எல்.ஏ!
Published on

மகாராஷ்டிர மாநிலத்தில் பொதுமக்கள் முன்னிலையில் பெண் எம்.எல்.ஏ. ஒருவர் அரசு சிவில் என்ஜினீயரின் சட்டை காலரை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்த சம்பவம் விடியோவாக வைரலாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாணே மாவட்டம், மீரா பயந்தர் பகுதியைச் சேர்ந்தவர் பெண் எம்.எல்.ஏ. கீதா ஜெயின். மீரா பயந்தர் நகராட்சி அதிகாரிகள், நோட்டீஸ் எதுவும் கொடுக்காமல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் கட்டப்பட்ட ஒரு வீட்டிலிருந்தவர்களை குடும்பத்துடன் வெளியேற்றி அந்த இடத்தை இடித்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த பெண் எம்.எல்.ஏ. அந்த இடத்துக்கு வந்து, இளநிலை அதிகாரியிடம் நோட்டீஸ் கொடுக்காமல் வீட்டை இடித்தது ஏன் என்று கேட்டதுடன், அவரின் சட்டையை பிடித்து இழுத்து கன்னத்தில் அறைந்தார்.

பின்னர் உள்ளூர் ஊடகத்துக்கு பேட்டியளித்த பெண் எம்.எல்.ஏ. கீதா ஜெயின், வீடுகளை இழந்த சோகத்தில் பெண்கள் நடுத்தெருவில் நின்றிருந்த நிலையில் அந்த அதிகாரி அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த எனக்கு கோபம் வந்தது. அதனால், அவரை கன்னத்தில்

அறைந்தேன். எனக்கு கோபம் வரும்போது இப்படித்தான் நான் நடந்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் பற்றி குறிப்பிட்ட பெண் எம்.எல்.ஏ., வீட்டின் ஒரு பகுதிதான் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. அதை தாங்களே இடித்துவிடுவதாக வீட்டின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

அந்த இடம் வேறு ஒரு பில்டருக்கு இடைஞ்சலாக இருந்துள்ளது. அதனால் வேறு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், நகராட்சி அதிகாரிகள் அந்த இடத்துக்கு சென்று ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை இடிக்காமல் முழு வீட்டையும் இடித்துவிட்டனர் என்றார் எம்.எல்.ஏ. கீதா ஜெயின்.

வீட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது நகராட்சி அதிகாரிகள் வீட்டில் இருந்த பெண்களின் தலை முடியை பிடித்து இழுத்ததாகவும் பெண் எம்.எல்.ஏ. குறிப்பிட்டார்.

பில்டர் ஒருவருடன் சேர்ந்துகொண்டு இரண்டு நகராட்சி அதிகாரிகள் தனியார் இடத்தில் கட்டப்பட்ட வீட்டை இடித்துள்ளனர். அதிகாரியை கன்னத்தில் அறைந்ததற்காக நான் வருத்தப்படவில்லை. அதற்கான தண்டனையை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.

இந்த விவகாரத்தை நான் சட்டப்பேரவையில் எழுப்புவேன். அதிகாரிகள் முடிந்தால் என் மீது வழக்கு தொடரட்டும். அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். தனியார் இடத்தில் கட்டப்பட்ட

வீட்டை நகராட்சி அதிகாரிகள் இடிப்பதை எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

2019 சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர் கீதா ஜெயின். பின்னர் உத்தவர் தாக்கரே முதல்வரான போது அவருக்கு ஆதரவு தெரிவித்தார். எனினும் ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, ஆட்சியை கவிழ்த்து முதல்வரான பின் அந்த பெண் எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் சேர்ந்துவிட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com