ட்ரோன் மூலம் உரங்கள் தெளிக்கும் டெக்னாலஜி

ட்ரோன் மூலம் உரங்கள் தெளிக்கும் டெக்னாலஜி

 ``வெளிநாடுகளில் ஆளில்லா விமானம் எனப்படும் ட்ரோன்கள் மூலம் பயிர்களுக்கு உரம் மற்றும் பூச்சிகொல்லிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ட்ரோன் பயன்படுத்துவது என்பது மிகக் குறைவாக உள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் ட்ரோன் பயன்படுத்தி உரம் தெளித்தாலும் எல்லா விவசாயிகளும் பயன்படுத்தினால் ஆட்கள் பற்றாக்குறையை போக்குவதற்கும், செலவை குறைப்பதற்கும் ட்ரோன் சிறந்த மாற்றாகும். இதனை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்த வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயத்தில் புதிய டெக்னாலஜி பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது அனைத்து விவசாயிகளும் எளிதாக பயன்படுத்தும் வகையில் ட்ரோன் மூலம் உரங்கள் தெளிக்கும் டெக்னாலஜியை கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் உருவாக்கி சாதனை செய்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகேயுள்ள தேவனம்பாளையம், குளத்துப்பாளையம், நல்லாட்டிபாளையம், சிறுகலந்தை ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட அமிர்தா வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள், கிராமப்புற விவசாய பணி அனுபவ (RAWE) திட்டத்தின் ஒரு பகுதியாக சில செயல் விளக்கங்களை நடத்தி காட்டினர்.

RAWE திட்டம் விவசாயிகளுடன் இணைந்து அவர்களின் பிரச்சனைகளை கண்டறிந்து, விவசாய தொழில்நுட்பங்களை அவர்கள் பயன்படுத்த வழிவகுக்கும் ஒரு திட்டமாகும்.

இந்த நிகழ்ச்சியில் குளத்துப்பாளையம், சிறுகலந்தை தலைவர்கள், கன்னிகாபரமேஸ்வரி, குணசேகரன் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 50 விவசாயிகள் கலந்து கொண்டனர். பல்கலைக் கழகத்தின் முதல்வர் டாக்டர். சுதீஷ் இந்த திட்டம் குறித்து அறிமுக உரை ஆற்றினார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் டாக்டர் மணிவாசகம் மற்றும் கிரீன் டெக் ஏவியேஷன் குழுவினரால் 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள வாழை நிலத்தில் ஆளில்லா ட்ரோன் மூலம் உரம் தெளிக்கும் நேரடி விளக்கக்காட்சி விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. தரையில் இருந்து 500மீ உயரம் வரை இயக்கக்கூடிய திறன் கொண்டது, மேலும் ரீ-சார்ஜபிள் பேட்டரிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

விவசாயத் துறையில், உரங்கள் தெளித்தல், வான்வழி கண்காணிப்பு, பயிர் கண்காணிப்பு, நில ஆய்வு, மேப்பிங், சேதமடைந்த அல்லது அழுகும் பயிர்களை ஆய்வு செய்தல் மற்றும் பல பணிகளுக்கு இந்த ட்ரோன்களை பயன்படுத்தலாம் என மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கி கூறினர்.

ட்ரோன்களை வாடகைக்கு அமர்த்தி இந்த தொழில்நுட்பத்தை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், விவசாயத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்துவதன் நன்மைகள், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் உடல்நலக் கேடுகளைக் குறைத்தல், அறுவடை செய்யப்பட்ட பொருட்களில் பூச்சிக்கொல்லி எச்சங்கள் குறைதல், பூச்சிக்கொல்லி பயன்பாட்டிற்கான செலவை குறைத்தல் ஆகியவை ட்ரோன்களை பயன்படுத்துவதால் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

ட்ரோன் தொழில்நுட்பத் துறையின் நிபுணத்துவத்தை விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் முறையான செயல்விளக்கங்கள் மற்றும் பயிற்சிகள் மூலம் விவசாயிகளிடையே ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் ஆகியவையே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com