
பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டல் தொடர்பான புகார்களை அடுத்து பா.ஜ.க. எம்.பி.யும், இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் மீது தில்லி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
எனினும் மைனர் சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதான புகார் மீது பதிவு செய்யப்பட்ட போக்சோ சட்ட வழக்கை ரத்துச் செய்யுமாறு அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
பிரிஜ் பூஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை ஜூலை 4 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தில்லி ஜந்தர் மந்தரில் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதியிலிருந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்ற அறிவுறுத்தலின் படி பிரிஜ் பூஷன் மீது தில்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து
பிரிஜ் பூஷனைக் கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மே 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்ற வளாக திறப்பு விழாவின் போது நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற அவர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது.
இதைத்தொடரந்து ஒலிம்பிக் பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாகவும் அறிவித்தனர். பின்னர் விவசாயிகள் சங்கத் தலைவர் நரேஷ் திகைக் விடுத்த வேண்டுகோள் பேரில் அந்த முயற்சியை அவர்கள் கைவிட்டனர்.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை போராட்டக்குழுவினர் சந்தித்தனர். அதைத் தொடர்ந்து சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டோரை அழைத்து மத்திய அமைச்சர் அனுராக் தாகுர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜூன் 15-ஆம் தேதிக்குள் பிரிஜ் பூஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் உறுதி தெரிவித்ததை அடுத்து மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தை நிறுத்திவைப்பதாக தெரிவித்தனர்.
பிரிஜ்பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகார் தொடர்பாக ஐந்து நாடுகளின் மல்யுத்த வீர்ர்கள் சம்மேளனத்திடம் தில்லி போலீஸார் தகவல்கள் கேட்டிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள், விடியோக்கள், சி.சி.டி.வி. காட்சிகள், போட்டிகள்
நடைபெற்ற இடம், வீர்ர்கள் தங்கியிருந்த இடம் ஆகியவற்றை குறித்த தகவலையும் விசாரணைக் குழுவினர் கேட்டிருந்தனர்.
மேலும் இது தொடர்பாக இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழுவினர் 180-க்கும் மேலானவர்களிடம் விசாரணை நடத்தி பிரிஜ் பூஷன் சிங் மீது இரண்டு எப்.ஐ.ஆர்.-களை பதிவு செய்திருந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை தில்லி போலீஸார் பெண் மல்யுத்த வீராங்கனை ஒருவரை பிரிஜ் பூஷன் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அவர் மீதான பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்தினர். பாலியல் துன்புறுத்தல் சம்பவம் எப்படி நடந்தது என்று நடித்துக் காட்டுமாறும் கேட்டுக் கொண்டனர். அப்போது பெண் வீராங்கனையுடன் பெண் போலீஸாரும் உடன் சென்றிருந்தனர்.
பிரிஜ் பூஜன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த மல்யுத்த வீர்ர்கள், வீராங்கனைகளின் புகார்கள் கொடுக்க வசதியாக பெண் தலைமையில் ஒரு குழுவை ஏற்படுத்துமாறும் வலியுறுத்தி வந்தனர். இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகுர் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேலும் மல்யுத்த வீர்ர்கள் சம்மேளனத் தேர்தலில் பிரிஜ் பூஷன் மற்றும் அவரது குடும்பத்தினர் எவரும் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க்க்கூடாது என்ற கோரிக்கையையும் போராட்டம் நடத்தியவர்கள் முன்வைத்ததாகவும்
அதையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.