சர்ச்சை வீடியோ புகாரில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது!

சர்ச்சை வீடியோ புகாரில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது!

திரைப்பட பிரபல சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன். இந்து முன்னணி மாநில கலைப் பண்பாட்டு பிரிவு செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் இவர், தற்சமயம் பாஜக ஆதரவு கட்சி பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த 18ம் தேதி மாலை தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை பதிவிட்டு பேசிய கனல் கண்ணனின் பேச்சு, தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த வீடியோவில் கிறிஸ்தவ மத போதகர் உடை அணிந்த நபர் ஒரு பெண்ணுடன் சேர்ந்து நடனம் ஆடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோவை தமிழ் பாடல் ஒன்றுடன் எடிட் செய்து இணைய தளத்தில் பதிவிட்ட வழக்கில் கனல் கண்ணனை இன்று சைபர் கிரைம் போலீசார் கைது செய்து இருக்கின்றனர். இந்த வீடியோ பதிவில் கனல் கண்ணன், ‘வெளிநாட்டு மத கலாசாரத்தின் உண்மை நிலை இதுதான். மதம் மாறிய இந்துக்களே சிந்தியுங்கள்! மனம் திரும்புங்கள்' எனப் பதிவிட்டு இருந்தார். இவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு, அவர் கிறிஸ்தவ மதத்தை அவமரியாதை செய்ததாக பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளையைச் சேர்ந்த திமுக ஐடி பிரிவு துணை அமைப்பாளர் ஆஸ்டின் பெனட் என்பவர் கன்னியாகுமரி எஸ்பி அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் செய்திருந்தார். இந்தப் புகாரை அடுத்து, கனல் கண்ணன் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 295ஏ (மத உணர்வுகளைப் புண்படுத்துதல்) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 506(2) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் கனல் கண்ணனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

இதையடுத்து, கனல் கண்ணன் இன்று கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி அலுவலக சைபர் கிரைம் போலீசில் நேரில் ஆஜரானர். அவரை விசாரணை செய்த போலீசார், விசாரணையின் முடிவில் அவரை கைது செய்து இருக்கின்றனர். இதுபோன்று கனல் கண்ணன் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசி கைது செய்யப்படுவது இது முதல் முறையல்ல. சென்னை மதுரவாயலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் எதிரில் இருக்கும் பெரியார் சிலையை உடைக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். இது சம்பந்தமாக பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்த கனல் கண்ணன், தொடர்ந்து சமூகவலைதளங்களில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பதிவிட்டு வருகிறார். தற்போது கிறிஸ்தவ மத அவமதிப்பு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com