#BIG NEWS : தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சவுத்ரி விபத்தில் மரணம்..!!

Super good films Producer Died
RB Chaudhary
Updated on

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி 90 களில் மிகவும் பிரபலமாக இருந்தார். ராஜஸ்தான் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார்.

அந்த காலகட்டத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு என்றாலே , மக்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வந்து அவர்களின் திரைப்படத்தை பார்த்து செல்வார்கள். அந்த அளவிற்கு அந்த தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படங்களின் மீது மக்கள் அபிமானம் வைத்திருந்தனர்.

குறைந்த பட்ஜெட் , ஏராளமான நகைச்சுவை காட்சிகள் , குடும்ப செண்டிமெண்ட் , நல்ல பாடல்கள் , நல்ல திரைக்கதை அம்சம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான திரைப்படங்களை ஆர்.பி சவுத்ரி தயாரித்திருந்தார். புதுவசந்தம், சேரன் பாண்டியன் , நாட்டாமை , பூவே உனக்காக , சூர்ய வம்சம் , துள்ளாத மனமும் துள்ளும் , சமுத்திரம் , நீ வருவாய் என , திருப்பாச்சி என ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களை இந்த தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளது.

ஏராளமான புதுமுக இயக்குனர்களுக்கு ஆர்.பி. சவுத்ரி வாய்ப்பளித்துள்ளார். இயக்குனர் விக்ரமன், கே .எஸ். ரவிக்குமார் ஆகியோர் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குனர்களாக இருந்துள்ளனர். இவர்களின் உதவி இயக்குனர்களும் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மூலம் இயக்குனர்களாக அறிமுகமாகி உள்ளனர். நடிகர் சரத்குமாரை சுப்ரீம் ஸ்டார் ஆக உயர்த்தியதில் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் பங்கு அதிகம். மேலும் விஜயின் முதல் பிளாக்பஸ்டர் திரைப்படமான பூவே உனக்காக இவர்கள் தயாரிப்பில் வெளிவந்தது தான்.

ரத்தன்லால் பகத்ராம் சவுத்ரி என்ற முழுப்பெயர் கொண்ட ஆர் பி.சவுத்ரிக்கு 4 மகன்கள் உள்ளனர். இவரது முதல் மகன் சுரேஷ் தயாரிப்பு நிறுவனம் பணிகளை பார்த்து வருகிறார். இரண்டாவது மகனான ஜீவன் ஸ்டீல் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இன்னொரு மகனான ஜித்தன் ரமேஷ் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இளைய மகனான ஜீவா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகன்களில் ஒருவராக இருக்கிறார்.

சமீபத்தில் தொழில் நிமித்தம் காரணமாக ஆர்பி.சவுத்ரி ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், இன்று மாலை ராஜஸ்தான் மாநிலம் உதைப்போரில் ஏற்பட்ட வாகன விபத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

logo
Kalki Online
kalkionline.com